Monday, May 12, 2008

தேடுபொறி

தேடுபொறி அல்லது தேடற்பொறி என்பது ஒர் கணினி நிரல் இணையத்தில் குவிந்து கிடக்கும் தகவல்களில் இருந்தோ கணினியில் இருக்கும் தகவல்களில் இருந்தோ நமக்கு தேவையான தகவலைப்பெற உதவுகின்றது. பொதுவாகப் பாவனையாளர்கள் ஓர் விடயம் சம்பந்தமாக தேடுதலை ஓர் சொல்லைவைத்து தேடுவார்கள். தேடு பொறிகள் சுட்டிகளைப் பயன்படுத்தி விரைவான தேடலை மேற்கொள்ளும். தேடுபொறிகள் என்பது பொதுவாக இணையத் தேடுபொறிகளை அல்லது இணையத் தேடற்பொறிகளையே குறிக்கும்.

வெறுசில தேடுபொறிகள் உள்ளூர் வலையமைப்பை மாத்திரமே தேடும். இணைய தேடு பொறிகள் பல பில்லியன் பக்கங்களில் இருந்து நமக்குத் தேவையன மிகப் பொருத்தமான பக்கங்களைத் தேடித் தரும். வேறுசில தேடற்பொறிகள் செய்திக் குழுக்கள், தகவற்தளங்கள், திறந்த இணையத்தளங்களைப் பட்டியலிடும் DMOZ.org போன்ற இணையத் தளங்களைத் தேடும். மனிதர்களால் எழுதப்பட்ட இணையத் தளங்களைப் பட்டியலிடும் தளங்களைப் போன்றல்லாது தேடு பொறிகள் அல்கோரிதங்களைப் பாவித்துத் தேடல்களை மேற்கொள்ளும். வேறு சில தேடற்பொறிகளோ தமது இடைமுகத்தை வழங்கினாலும் உண்மையில் வேறுசில தேடுபொறிகளே தேடலை மேற்கொள்ளும்.

ஆரம்ப காலத்தில் ASCII முறை வரியுருக்களை கொண்டே தேடு சொற்களை உள்ளிட முடிந்தது. தற்போது ஒருங்குறி எழுத்துக்குறிமுறையை பல தேடுபொறிகளும் ஆதரிப்பதால் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலக மொழிகள் அனைத்திலும் அவ்வம் மொழிப்பக்கங்களை தேடிப்பெறக்கூடியதாகவுள்ளது.

எவ்வாறு தேடு பொறிகள் வேலை செய்கின்றன

இணையத்தில் தவழ்தல்சுட்டியிடுதல்தேடுதல் தேடு பொறிகள் வையக வலையில் அல்லது உலகளாவிய வலைப் பக்கங்களில் இருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்களைச் சேமித்தே தேடல்களை மேற்கொள்ளுகின்றன. இவை இணையப் பக்கங்களை தவழ்வதால் (சில சமயங்களில் சிலந்திகள் என்று அழைக்கப் படுகின்றன) குறிப்பிடப் பட்ட பக்கங்களின் ஒவ்வோர் இணைப்பிற்கும் இவை செல்லும். சில சமயங்களில் சில பக்கங்களைத் தவிர்ப்பதற்கு ரோபோக்கள் முடிவு செய்யும். அவை இணையப் பக்கங்களை அலசி ஆராய்ந்து அவை எவ்வாறு சுட்டியிடப் படும் எனத் தீர்மானிக்கப்படும். கூகிள் போன்ற சில தேடுபொறிகள் முழுப்பக்கத்தையோ அல்லது பகுதியையோ சேமித்துக் கொள்ளும்.

தேடல்களை மேற்கொள்ளல்

தேடுபொறிகளில் தேடும்பொழுது ஒருங்குறியில் உள்ள சொற்களை இட்டுத் தேடலாம். யாஹூ! தேடல்களில் தேடல்களைத் தட்டச்சுச் செய்யும் பொழுதே நீங்கள் என்ன விடயத்தைத் தேட முற்படுகின்றீர்கள் என்று ஊகித்து ஆலோசனைகளை வழங்கும் இதே வசதி கூகிளிலும் பரீட்சாத்தகரமாக உள்ளது. ஓர் குறிப்பிட்ட தளத்தைத் தேடவிரும்புகின்றீர்கள் என்றால் தேடுபொறி site:ta.wikipedia.org என்றவாறு உள்ளீடு செய்தால் தமிழ் விக்கிபீடியாவில் உள்ள தேடுபொறி தொடர்பான கட்டுரைகளைத் தேடிக்கொள்ளும்

கூகிள் வரலாறு

கூகுள் ஒரு பிரபல்யமான தேடுபொறியாகும். இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப்படுகின்றது.


ஆரம்ப வரலாறு

கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக(Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணினியின் திரையில்) கொடுத்ததை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

தேடப்படும் விடையம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிட கொட்டகையில் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.

மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். கார் கொட்டகையில் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999ம் மார்ச் மாதம் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு மாற்றலாகின. அங்கு வெவ்வேறு இரு இடங்களில் "கூகிள்" இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்று. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி கூகிள்பிளெக்ஸ் (googolplex) எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006 இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை கூகிள் கொள்முதல் செய்தும் கொண்டது.

கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து கூகிள் சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும், இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும் விகிதத்திலும் விற்கப்படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். கோட்டு.கொம் என்ற இதன் பெயர் "ஒவேச்சர் சேர்விசஸ்" (Overture Services) ஆகவும் பின்நாளில் யாகூ! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்றிங்" (Yahoo! Search Marketing) ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.

ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிக பிரபலம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்ஃபோர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை 'கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது' என அர்த்தப் படுத்தியும் உள்ளது. கூகிள் தேடுபொறி தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.

கூகிளின் பங்குச் சந்தை வருகை

கூகிள் தேடுபொறி 1998 செப்ரம்பர் 7இல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நிறுவப்பட்டது. இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் சிறப்பு பங்கு வகிக்கும் கூகிள் 2004ம் ஆகஸ்ட் 19ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்துகொண்டது. இந்த நிறுவனத்தில் 15,916 முழுநேர வேலையாட்கள் (2007 செப்டம்பர் 30ம் கணக்கெடுப்பின் படி) பணியாற்றுவதுடன் இதுவே நாஸ்டாக் (NASDAQ) இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியதுமாகும். லாரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகியோரினால் சேர்ந்து உருவாக்கப்பட்ட கூகிள் நாஸ்டாக் (NASDAQ) பங்குச்சந்தையில் வந்த 2004ம் ஆகஸ்டு 19 அன்று $1.67 பில்லியன்களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியன் மேலாக கூகிள் நிறுவனம் மதிப்பாகியிருந்தது. படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள், ஆரம்பத்தில் இருந்த விளம்பர யுக்தி விஸ்தரிப்பு, இணைய மின்-அஞ்சல் (webmail), இணையவழி வரைபடம்(Google Earth), அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணையவழி வீடியோ(video) வையும் இணைத்து கொண்டதன் மூலமாக பன்மடங்கு (4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன் 2005ம் யூன் மாதம் $52 பில்லியன் சந்தைப் பெறுமதியுடன் $7 பில்லியன் பணத்தினையும் கூகிள் தம் வசம் வைதிருந்தது. இத்தனைக்கும் "பிசாசு மாதிரி இருக்காதீர்" (don't be evil) (இதையே தனது வியாபார அடை மொழியாக கூகிள் பதிவு செய்திருந்தது.), என மற்றயவர்களை ஆரம்பத்தில் இருந்து கூறிவந்த கூகிள் தற்போது தனது நிலைப் பாட்டினை நியாயப்படுத்தி வருகிறது. மேலும், கூகிள் தனது தேடுபொறியின் இலச்சனை (logo) யில் பலவித கண்கவர் யுக்திகளை சிறப்பு நாட்களில் கூகிள் டூடிள்ஸ் (Google Doodles) என வெளியிட்டும் வருவதும் யாருமறிந்ததே.

மூலதனமும் பங்குச் சந்தையும்

முதலாவது முதலீடாக ஒரு இலட்சம் டொலர்களை சன் மைக்கிரோசிஸ்டம்ஸ் (Sun Microsystems) இன் ஸ்தாபகர்களில் ஒருவர் மூலம் மட்டுமே பெற்றனர் என்பதுடன், அப்போது கூகிள் நிறுவனம் தோன்றி இருக்கவுமில்லை. இந்த முதலீட்டின் பின் 6 மாதங்கள் சென்ற நேரத்தில் பல முதலீட்டாளர்கள் முதலிட முன் வந்தும் இருந்தனர். அத்துடன், 2003ம் ஒக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கூகிளை எடுத்துச்செல்ல ஆலோசிக்கும் வேளை மைக்கிரோசொஃப்ட் (Microsoft) புகுந்து பங்காளியாக அல்லது தத்து எடுப்பதற்கு எடுத்த முயற்சி கைகூடாமற் போயிற்று. ஜனவரி 2004இல் உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான மோர்கன் ஸ்ரான்லி (Morgan stanley), கோல்மான் சாச்ஸ் (Goldman Sachs) இனால் பங்குச் சந்தையில் சேர்வதற்கான ஏற்பாடு தொடங்கபட்டது. பங்குச் சந்தையில் முதல்நாள் சேரும் வேளை $4 பில்லியங்களாவது திரட்டப்படும் எனவும் கணக்கிட்டனர்.

இதனிடையே கூகிளானது 2004ம் மேமாதம் இரு பெரிய முதலீட்டளர் வங்கியில் ஒன்றான கோல்மானை வெட்டி விட்டு வேறொரு பிரபல்யமான வங்கியை இணைத்துக் கொண்டு 2004ம் ஆகஸ்டு 19ம் நாள் முதல் முதலாக பங்குச் சந்தைக்கு 19,605,052 பங்குகளுடன் வந்தபோது ஒவ்வொரு பங்கும் $85க்கு விற்கப்பட்டது. முதல் நாள் மொத்தமாக கைமறிய பங்குகள் 22,351,900 என்பதுடன் அன்றைய இறுதி நேர விலை $100.34 ஆக மூடப்பட்டது, இது உத்தேசிக்கப்பட்ட அளவு தொகையை விடவும் மிக குறைவாகவும் இருந்தது. எனினும் அன்று கூகிளின் இரட்டையர்கள் தம்வசம் 271 மிலியன் பங்குகளை வைத்திருந்ததன் மூலமாக $23 பிலியன்கள் மேல் நிறுவனத்தை மதிப்பு ஏற்றியதோடு $1.67 பில்லியன்களை பணமாக திரட்டியும் கொண்டனர். அத்தோடு கூகிளில் பணியாற்றும் பலரையும் அன்று திடீர் கடதாசி டொலர் மில்லியனர்கள் ஆக்கியதும் அல்லாமல் வியாபார எதிரியாக இருக்கக் கூடிய யாகூ! (8.4 மில்லியன் பங்குகளை நட்டஈடாக பெற்றுக் கொள்ள ஒரு பேரத்தில் பங்குச் சந்தையின் 10 நாள் முன் உடன் பட்டன). ஐயும் ஆக்கியிருந்தது. இதன் அபார தொடர் வளர்ச்சியில் 2005ம் யூன் மாதம் கூகிள் நிறுவனம் $52பில்லியன்கள்(பங்குகள் தவிர $7பில்லியன்கள் பணமாக) மேல் மதிப்பானதுடன் இதுவே உலகின் மிகப்பெரிய பெறுமதியுள ஊடகவியல் நிறுவனம் ஆயிற்று. தொடற்சியாக பங்குகள் ஏற்ற இறக்கம் கண்டு 2007ம் ஒக்டோபரில் ஒரு பங்கு $700 ஆக இருந்த கூகிளின் பங்குகள் அமெரிக்கா, லண்டன் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்டுள்ளது.

சுவீகரிப்பு, கூட்டுக்கள்

கூகிள் பெப்ரவரி 2003இல் வெப்லொக் (weblog) இன் முன்னோடியும் புளொக்கர்(Blogger) இன் சொந்தக்காரரான பைரா லாப்ஸ் (Pyra Labs)ஐ சொந்தமாக்கிற்று. உலக இணையத் தளத்தின் 84.7 விகிதமான தேடுதல்களை 2004ம் முற் பகுதியில் கூகிள் நிறுவனமானது யாகூ, ஏ.ஓ.எல் (AOL), சி.என்.என் (CNN) ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செய்திருந்தது, பின்பு 2004ம் பெப்ரவரி இல் யாகூ விலகிக் கொண்டு தனது சொந்த தேடுபொறியை தொடங்கிற்று. யாகூ விலகிக் கொண்ட விடயம் கூகிள் நிறுவனம் சந்தித்த ஒரு பெரிய சவாலாக இருந்த போதிலும் ஜீமெயில்( Gmail), ஓர்க்குற்(orkut), மற்றும் புதிய பல யுக்திகள் மூலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

அத்துடன் கூகிள் நிறுவனம் தனது நீண்டகால ஆராய்ச்சிக்கான நாசா (NASA) இன் கூட்டு 2005ம் செப்டம்பரிலும், இணையத்திற்கான கூட்டு "ஏ.ஓ.எல்" (AOL)லுடன் டிசம்பர்இலும் உருவாக்கிக் கொண்டது. மேலும், சன்மைக்கிரோ (Sun Microsystems) உடன் தொழில் நுட்ப்பத்தை பகிர்ந்து கொள்வதோடு, கூகிள் நிறுவனம் தனது ஊளியர்களை ஓப்பிண் ஆபிஸ்(OpenOffice.org) நிறுவன வேலைகளிலும் வாடகைக்கு அமர்த்தி உள்ளது. இதனிடையே 2004கும் 2006ம் வருட இறுதிக்கும் உள்ள காலகட்டத்தில் பல மென்பொருள் முன்மாதிரி நிறுவனங்களையும் வானோலி விளம்பர நிறுவனம் டிமார்க்(dMarc)ஐ தம் வசமாக்கிக் கொண்டதுடன் $900 விளம்பர உடன்பாட்டை மைஸ்பேஸ் (MySpace) உடன் செய்தனர். கூடவே, 2006இன் இறுதி காலத்தில் யூ டியூப் (YouTube) என்ற மிகவும் பெயர் பெற்ற இணையத்தள வீடியோ $1.65 பில்லியனிற்கு கூகிளினால் கொள்முதலானது, இத்துடன் விக்கி தொழில் நுட்பத்தை வடிவமைத்த ஜொட்ஸ்பொட் (JotSpot)ம் சொந்தமாக்கப்பட்டது.

இத்துடன் நிற்காமல் 2007ம் ஏப்ரலில் $3.1பில்லியன் கொடுத்து டபள் கிளிக் (DoubleClick)ஐ கொள்முதல் செய்ததோடு 2007ம் யூலை 9இல் பொஸ்டினி (Postini)யும் கொள்முதல் செய்து கொண்டது. இத்தனைக்கும் மத்தியில் தனது பரம எதிரியான மைக்கிரோசொப்ற் (Microsoft) இன் பல திறமை உள்ளவர்களையும் தம்வசம் ஈர்த்ததுடன் அந் நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் வெளியே இரகசியமாக 2005 டிசம்பர் 22இல் தீர்த்தும் கொண்டது. கூகிள் நிறுவனம் 2006ல் ".மோபி" (.mobi) எனப்படும் கைத்தொலைபேசி இணைய முகவரி தோற்றத்திற்கு காரண கர்த்தாவாகவும், முதலீடு இட்ட நிறுவனமாகவும் முன்நிலை படுத்தியதோடு ஸீங்கு.மோபி (Zingku.mobi), கூகிள்.மோபி (Google.mobi)இன் சொந்தக் காரருமாகவும் கூகிள் உள்ளது.

நன்கொடை

2004ல் இலாபம் ஈட்டாத "கூகிள்.ஓர்க்" (Google.org) ஐ நிறுவியதோடு ஆரம்ப நிதியாக $1பிலியன் வைப்பு செய்யப்பட்டது. இந் நிறுவனத்தின் முன்நிலை கவனிப்புக்களாக சூழல் வெப்பமாகுதல் தடுத்தல்,உலக சுகாதாரம்,உலக வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப் பட்டுள்ளது. அத்துடன் இந்த அமைப்பின் முதல் திட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகனங்களை வடிவமைக்கும் திட்டம் டாக்டர்.லாரி (Dr.Larry) தலைமையில் தொடங்கப் பட்டுள்ளது.

உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள் சில.

தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம்.

1. முகப்பு பக்க அளவு:

உங்கள் இணைய தளம் பதிக்கப்பட்டு சில வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரையில் அல்லது ஓராண்டு காலத்தில் உங்கள் தளத்தின் முகப்பு பக்கம் வழியாகத்தான் அனைவரும் நுழைவார்கள். (பொதுவாக இந்த முகப்பு பக்கத்தினை index.htm அல்லது default.htm என்று அழைப்பார்கள்.) எனவே இதனை அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். முகப்பு பக்கம் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அதனைக் காண விரும்புபவர்கள் எரிச்சல் அடைந்து ஆர்வம் குறைந்து தளத்தைக் காணும் முயற்சியைக் கைவிடுவார்கள். உங்களுடைய தளத்தினைப் பெரும்பாலும் வெளிநாட்டினர்தான் காண விரும்புவார்கள் எனில் இந்த முகப்பு பக்கத்தின் அளவு 90 கேபிக்குள் இருப்பது நல்லது. இதுவே இந்திய மக்கள் தான் காண்பார்கள் என்றால் 50 கேபி என்ற அளவிற்குள் இருப்பது நல்லது. இந்த அளவு எச்.டி.எம்.எல். வழி தகவல், பிளாஷ் மற்றும் அனிமேஷன் ஆகிய அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும்.

2. முதல் ஈர்ப்பு:

எந்த பொருளும் மக்களை முதல் பார்வையிலேயே கவர வேண்டும் என்பது பொதுவான ஒரு விஷயமாகும். இன்டர்நெட் தளத்தின் முகப்பு பக்கமும் அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே உங்களைப் பற்றிய தகவல்கள் நச் என்ற வகையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக அதே சமயத்தில் தளத்தின் உள்ளே சென்று பார்க்கும் வகையில் அமைய வேண்டும்.

3. நேரம்:

இப்போது பிளாஷ் தொகுப்பு உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் இதனைப் பார்ப்பவர்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிப்பது நல்லதல்ல. இது அதிக நேரம் எடுக்கும். கட்டாயம் பிளாஷ் காட்சி ஒன்று தேவை என்றால் அதனை பார்வையாளர்கள் வேண்டாம் என்று விரும்பினால் ஒதுக்கும் வசதியும் தரப்பட்டிருக்க வேண்டும். வெறும் டெக்ஸ்ட் மட்டும் கூட அழகாக அமைக்கப்படலாம் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தளத்தைக் காண வருபவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும். உங்கள் தளத்திற்கும் பெருமை சேர்க்கும்.

4. தொடர்பு:

நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அதனைக் காண்பவர்கள் உங்களிடம் சில விளக்கங்கள் வேண்டி உங்களைத் தொடர்பு கொள்ள எண்ணலாம். எனவே எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என முகப்பு பக்கத்திலேயே குறிப்பிட வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி அளிக்கலாம். அல்லது பார்ப்பவரின் கம்ப்யூட்டரில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராமை இயக்கி நேரடியாக மின்னஞ்சல் அனுப்பும் வசதியையும் ஏற்படுத்தலாம்.

5. புதுமை

ஆம் அதைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணைய தளத்தை புதுப்பித்துக் கொண்டிருங்கள். அதற்காக அடியோடு அதனை மாற்ற வேண்டியதில்லை. சிறிய மாற்றங்கள் அவ்வப்போது இருப்பது உங்கள் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்கும்.

6. சரக்கு

ஆம் உங்கள் நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது உங்களின் தனிப்பட்ட தளங்களில் தகவல் சரக்கு நிறைய இருக்க வேண்டும். உங்கள் நிறுவனம் எந்தப் பொருளையேனும் தயாரிப்பதாக இருந்தால் அந்த பொருளைப் பற்றி மட்டுமின்றி உங்கள் நிறுவனம் அதன் நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு பற்றியும் நிறைய தகவல்களை நீங்கள் தரலாம்.

7. மேம்பாடு

உங்கள் நிறுவனம் போல, உங்கள் அமைப்பு போல இயங்கும் மற்றவற்றின் இணைய தளங்களையும் நீங்கள் அடிக்கடி சென்று பார்த்து அவர்கள் செய்திடும் மாற்றங்கள், மேம்படுத்தும் தகவல்கள் ஆகியவற்றையும் கண்டறிந்து ஆய்வு செய்து உங்கள் தளத்தையும் அதே போல இல்லாமல் அதைவிடச் செறிவாக மேம்படுத்துங்கள்.

8. சோதனை

உங்கள் இணைய தளம் உங்களுக்குப் பிடித்த பிரவுசரில் மட்டும் சரியாக இயங்கக் கூடாது; மற்ற பிரவுசர்களிலும் மிகச் சரியாக இயங்க வேண்டும். அப்போது தான் அனைத்து தரப்பினரையும் உங்களால் கவர முடியும். அத்துடன் பல்வேறு ரெசல்யூசன் அமைப்பிலும் உங்கள் இணைய தளத்தைச் சோதனை செய்து பார்த்திட வேண்டும். வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயக்கிப் பார்த்திட வேண்டும்.

9. படங்கள்

நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இறங்குகின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறிய வேண்டும். வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புகளில் இந்த படங்கள் எப்படி இறங்கி இயங்குகின்றன என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.

10. சொல்லும் மொழி

உங்கள் மொழி நடையை ஸ்டைலாக அமைப்பதற்கு முன் அதில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழை இல்லாமல் இருப்பதனை ஒன்றுக்குப் பல முறை உறுதி செய்து கொள்ளுங்கள். தமிழ் மொழியில் உங்கள் தளத்தில் தகவல்கள் தரப்பட்டால் அந்த எழுத்துருவினை டவுண் லோட் செய்து கொள்ள வசதி செய்து தர வேண்டும். அந்த வசதி உள்ளது என்பதனை ஒரு ஜேபெக் பட பைலாகவோ அல்லது ஆங்கிலத்திலோ அமைக்கலாம்.

11. எழுத்துரு

அனைவருக்கும் தெரிந்த எழுத்துருக்களில் உங்கள் தகவல் தளத்தை அமைப்பது நல்லது. அப்போது தான் பார்ப்பவர்களுக்குத் தாங்கள் பழக்கப்பட்ட தளம் போல உங்கள் தளம் காட்சியளிக்கும்.

12. எளிதான தாவல்

உங்கள் தளத்தின் முகப்பு பக்கத்திலிருந்து தகவல்களுக்காக நேயரை மற்ற தளத்திற்கு இழுப்பது மிக எளிதான ஒன்றாக இருக்க வேண்டும். அவை உடனடியாக இறக்கம் செய்யப்படும் வகையில் தரப்பட வேண்டும். எந்த பக்கத்தில் இருந்தாலும் பிற பக்கங்களுக்குச் செல்வதற்கு எளிதான வழி அமைத்துத் தரப்பட வேண்டும்.

13. விளம்பரம்

உங்கள் இணைய தளம் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக விளம்பரங்களுக்கு இடம் தருவது தவறில்லை. ஆனால் அவை அளவுக்கு மீறி இடம் பெறக் கூடாது. இரண்டு விளம்பரங்களுக்கு மேல் இருப்பது சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கும்.

14. பாதுகாப்பு

இணைய தளத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் அதன் பாதுகாப்பு. உங்கள் இணைய தளத்தினுள் யாரும் நுழைய முடியாதபடி பாதுகாப்பு வளையங்களை அமைத்து அவற்றை அடிக்கடி மாற்றி மாற்றி அமைத்துவிட வேண்டும்.


உங்கள் இணைய தளப் படங்களை பிறர் திருடாமலிருக்க செய்ய வேண்டியவை

பலரும் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் அவை சார்ந்த படங்களை இணைத்து இணைய தளங்களை அமைக்கிறார்கள். ஆனால் இந்த தளங்களைப் பார்க்கும் நேயர்கள் இவற்றில் உள்ள படங்களை அப்படியே காப்பி செய்து தங்களுடைய விருப்பப்படிப் பயன்படுத்துகிறார்கள். சிலர் அவற்றை மற்றவர்களுக்கு விற்று விடுகிறார்கள். சிலரோ அவற்றைக் கீழ்த் தரமாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த திருட்டை எப்படித் தடுப்பது? இது குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம். இணைய தளங்களில் பொருத்தப்பட்டு காட்சியளிக்கிற படங்களை காப்பி செய்ய முடியாதவாறு தடுக்க சில வழிகள் உள்ளன. உங்கள் வழிகளை மீறி படங்களைச் சாதாரண பயனாளர்களால் காப்பி செய்ய முடியாது. ஆனால் கம்ப்யூட்டர் விற்பன்னர்களால் காப்பி செய்ய முடியும்.

ரைட்கிளிக் செய்வதை தடுக்க:

பொதுவாக ஓர் இணைய தளத்தில் உள்ள படத்தால் ஈர்க்கப்பட்டவர் அதை காப்பி செய்ய அதை ரைட்கிளிக் செய்வார். மெனு கிடைக்கும். அதில் Save Image As என்பதைப் போன்ற கட்டளை தெரியும். அதை கிளிக் செய்தால், அந்தப் படம் அவர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். எனவே ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி, ரைட்கிளிக் செய்தால் மெனு கிடைக்காதவாறு செய்து விட வேண்டும். மெனு கிடைக்காததால் Save Image As கட்டளையை அவரால் செயல்படுத்த முடியாது. ரைட்கிளிக் செய்யும் பொழுது கிடைக்கிற மெனுவில் வேறு நல்ல பயனுள்ள கட்டளைகளும் உள்ளன. எனவே ரைட்கிளிக்கால் கிடைக்கிற மெனுவைத் தடுத்துவிட்டால், அந்த நல்ல கட்டளைகளை உங்கள் இணைய தளத்துக்கு வருபவர்களால், உங்கள் வெப் தளத்தில் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு எரிச்சல் ஏற்படும். மீண்டும் உங்கள் தளத்துக்கு வரமாட்டார்கள்.

வேறு படத்தை காப்பி செய்யும்படி ஏமாற்ற:

ரைட்கிளிக் செயலை ஜாவாஸ்கிரிப்ட் மூலம் தடுக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா? Rollover என்ற ஜாவாஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்த வேண்டும். யாரும் காப்பி செய்யக் கூடாது என நீங்கள் நினைக்கிற படத்தை வெப் பக்கத்தில் காட்டுங்கள். மவுஸை அந்த படத்தின் மேல் கொண்டு சென்றால் வேறு படம் தெரியும்படி, ஜாவாஸ்கிரிப்டில் Rollover கட்டளையில் கூறிவிடுங்கள். எனவே உங்கள் வெப் பக்கத்தை பார்வையிடுபவருக்கு அந்த படம் தெரியும். ஆனால் அதை காப்பி செய்ய மவுஸை அதன் மேல் கொண்டு போனால் அந்த படம் மறைந்து வேறுபடம் காட்சியளிக்கும். எனவே ரைட் கிளிக் மூலம் காப்பி செய்தால் அந்த புதிய படம்தான் அவர் கம்ப்யூட்டரில் காப்பியாகும். எப்போதும் உங்கள் படம்தான் தெரிய வேண்டும் மவுஸைக் கொண்டு போனவுடன் வேறு படம் தெரியக் கூடாது என நினைத்தால் அதற்கும் வழி உள்ளது. Transparent Gif படத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பிறகு Embedded style sheet மூலம் அந்த Transparent Gif படத்தின் கீழே உங்கள் படத்தை வைத்து விடுங்கள். உங்கள் படத்தின் மேலே கண்ணாடி காகிதம்போல் Transparent Gif வீற்றிருப்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாது. ரைட்கிளிக் செய்து படத்தை காப்பி செய்கிறவர்களுக்கு கண்ணாடி காகிதமான Transparent Gif படமே காப்பியாகும். அதன் கீழேயுள்ள உங்கள் படம் காப்பியாகாது.

படத்தைத் துண்டுகளாக மாற்றி வெப் தளத்தில் போட:

ஒரு படத்தை அப்படியே உங்களது இணையப் பக்கத்தில் வைக்காதீர்கள். அதைப் பல துண்டுகளாகப் பிரித்து அந்த துண்டுகளை வெப் பக்கத்தில் அமைத்திடுங்கள். எனவே உங்கள் படத்தை காப்பி செய்ய விரும்புகிறவர் அந்த துண்டுகளையெல்லாம் காப்பி செய்து பின்பு ஏதாவது இமேஜ் எடிட்டிங் புரோகிராம் கொண்டு அவற்றை ஒட்ட வைக்க வேண்டும். இந்த எரிச்சல் பிடித்த வேலைக்கு பயந்து அந்த துண்டுகளை காப்பி செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

படத்தினுள் வாட்டர் மார்க்கை நுழைக்க:

படத்தை அப்படியே வெப் பக்கத்தினுள் கொண்டு வரக்கூடாது. அந்த படத்தின் உள்ளே உங்கள் பெயர் அல்லது வேறு ஏதாவது எச்சரிக்கைச் செய்தியை வாட்டர் மார்க்காக நுழைத்து விட வேண்டும். படத்துக்கு இடையூறு இல்லாமல் ஆனால் படத்தை காப்பி செய்பவர்களுக்கு அது பயன்படாதவாறுவாட்டர் மார்க் இருக்க வேண்டும். ஏதாவது இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் கொண்டு வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். யார் கண்களுக்கும் தெரியாத வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். இதற்கெனவே சில சாப்ட்வேர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக Digimare (www.digimare.com) என்ற சாப்ட்வேர் மூலம் கண்ணிற்கு தெரியாத வாட்டர் மார்க்கை உங்கள் படத்தினுள் உருவாக்கலாம். வாட்டர் மார்க் தெரியாததால் எல்லாரும் உங்கள் படத்தை காப்பி செய்யலாம். ஆனால் அப்படி காப்பி செய்தவர்கள் மீது சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.