Friday, June 6, 2008

அசைக்க முடியாத பாஸ்வேர்ட் அமைக்கலாம்

ஒவ்வொரு புரோகிராமிற்கும் தனியான பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும். ஒரே பாஸ்வேர்டை அனைத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. எப்படிப்பட்ட திருடனும் அசைக்க முடியாத பாஸ்வேர்டை நீங்கள் அமைக்கிறீர்களா? இந்த கேள்விக்கு பலர் இல்லை என்றுதான் பதிலளிப்பார்கள்.

ஏனென்றால் பலர் பாஸ்வேர்ட் அமைக்கையில் பெரும்பாலும் நமக்குப் பிடித்தவர்களின் பெயர், குழந்தைகளின் பெயர், குடும்பத்திலுள்ளவர்களின் பெயர், ஊர் பெயர் ஆகியவற்றுடன் பிறந்த நாள் அல்லது திருமண நாள் ஆகியவற்றை இணைத்து வைக்கிறார்கள். இது யாராலும் அனுமானம் செய்யக் கூடியது என்பதனை மறந்துவிடுகிறார்கள். அல்லது செல்லப் பெயர் வைப்பது போல மிகச் சிறியதாக வைக்கிறார்கள்.

இந்த முறைகள் எல்லாம் நம் பாஸ்வேர்டை எப்படியாவது கண்டு நம் பெர்சனல் தகவல்களைத் திருட முயற்சிப்பவர்களுக்கு எளிதாக வழி வகைக்கும் செயல்களாகும். ஒரு பாஸ்வேர்டினை எப்படி யாரும் தெரிந்து கொள்ள முடியாதபடி அமைக்கலாம் என்பதனையும் ஒரு பாஸ்வேர்ட் அமைப்பதில் என்ன என்ன கடைப்பிடிக்க வேண்டும், எவற்றையெல்லாம் பின்பற்றக் கூடாது என்பதனையும் இங்கு பார்க்கலாம்.

1. ஒரு பாஸ்வேர்ட் குறைந்தது 8 கேரக்டர்களில் அமைக்கப்பட வேண்டும். மிக உறுதியானதாக வேண்டும் என்றால் 14 கேரக்டர்களில் அமைய வேண்டும். இது எந்த வகையிலும் தொடர்ச்சியானதாக இருக்கக் கூடாது.
பாஸ்வேர்டை ஒரு சொல்லில் அமைப்பதைக் காட்டிலும் இரண்டு சொற்கள் அடங்கிய ஒரு சொல் தொடராக (“pass phrase”) அமைப்பது இன்னும் நல்லது.
இதனை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். நமக்கும் மனதில் வைத்திருப்பது எளிது. rendu idli என்று வைத்தால் யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஆக இருக்கும்.

2. எழுத்துகள், எண்கள் மற்றும் அடையாளக் குறிகள் (*&%#@) ஆகிய மூன்று வகைகளையும் இணைத்து உருவாக்குவது நல்லது. இதுவே 15 கேரக்டர்களில் அமைந்தால் இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கும். சரி இது எப்படி நம் மனதில் ஞாபகமாக இருக்கும் என்று கேட்கிறீர்களா? கீழ்க்கண்ட வழிகளில் சிந்தியுங்கள். முதலில் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் புரோகிராம் ஸ்பேஸ் இணைந்த சொல் தொடர்களைப் பாஸ்வேர்டாக ஏற்றுக் கொள்ளுமா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

பின் உங்களுக்கு பிரியமான ஒரு வாக்கியத்தை நினைவில் கொள்ளுங்கள். My son is three years old. இப்போது இந்த வாக்கியத்தில் உள்ள சொற்கள் அனைத்திலும் முதல் எழுத்துக்களை எடுத்து ஒரு பாஸ் வேர்ட் அல்லது பாஸ் பிரேஸ் அமையுங்கள். எடுத்துக் காட்டாக இந்த வாக்கியத்தில் இருந்து msityo என்ற சொல் கிடைக்கிறது. இதிலும் கூட இடையே ஏதேனும் ஒரு எழுத்தை கேபிடல் லெட்டராக அமைக்கலாம். அடுத்து இதனுடன நீங்கள் விரும்பும் ஸ்பெஷல் கேரக்டர் அல்லது எண்களை இதனுடன் இணைத்துக் கொள்ளுங்கள். m$sit3yo என்று கூட அமைக்கலாம். இந்த பாஸ்வேர்டை ஏதேனும் ஒரு இணைய தளத்தில் கொடுத்தால் அது ஸ்ட்ராங்கானதா என்று சொல்லும்.
இனி தவிர்க்க வேண்டியவற்றைப் பார்க்கலாம்.

1. தொடர் எழுத்துக்கள் அல்லது எண்களைத் தவிர்த்திடுங்கள். 1234567 என்பது போலவோ abcdefgh என்றோ இருக்கக் கூடாது. அல்லது கீ போர்டில் உள்ள அடுத்தடுத்த எழுத்துக்கள் இணைந்ததாகவோ இருக்கக் கூடாது. இதனை ஒருவர் எளிதில் அனுமானித்துவிடலாம்.

2. S க்குப் பதிலாக $ அல்லது O வுக்குப் பதிலாக 0 என அமைத்தால் இந்த் லாஜிக்கைப் பயன்படுத்தி பிறர் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.
3. உங்கள் பெயரில் ஒரு பகுதி, பிறந்த நாள், பான் கார்டு எண் அல்லது உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் மேற்படி விஷயங்களை பாஸ்வேர்டில் அமைக்க வேண்டாம்.

4. சொற்களைப் பின்புறமாக அமைத்தல் (Password Drowssap) ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து அமைத்தல் (Computer Cmuer) போன்ற வழிகளும் கூடாது. பொதுவாக மக்கள் தவறிழைக்கும் சொற்களையும் (Indhia, Telifon) பயன்படுத்தக் கூடாது. சிலர் வேண்டுமென்றே சொல்லக் கூசும் சொற்களைப் பயன்படுத்துவார்கள். இதனால் இன்னொரு நாளில் நம் குழந்தைகளிடம் பாஸ்வேர்ட் என்ன என்று சொல்ல முடியாது.

5. ஒவ்வொரு புரோகிராமிற்கும் தனியான பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும். ஒரே பாஸ்வேர்டை அனைத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. இமெயில் அக்கவுண்ட்டிற்கு ஒன்று, பேங்க் அக்கவுண்ட்டிற்கு ஒன்று, சில குறிப்பிட்ட தளங்களில் நுழைய வேறு என வெவ்வேறு பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தவும்.
6. ஆன்லைனில் உங்கள் பாஸ்வேர்ட்களை எல்லாம் ஸ்டோர் செய்து வைத்தல் கூடாது.

7. பாஸ்வேர்ட்களை வேற்று நபர்களிடம் சொல்லவே கூடாது.

8. பாஸ்வேர்ட்களை எழுதி வைத்திருந்தால் அவற்றை மற்றவர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். நமக்கு உற்றவர்கள் வேறு நபர்களிடம் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் பாஸ்வேர்டை வெளியிடுவதும் கூடாது.

9. இமெயிலில் அல்லது இமெயில் வழியாக வந்துள்ள படிவங்களில் பாஸ்வேர்டை டைப் செய்து அனுப்புவது கூடவே கூடாது.

10. பாஸ்வேர்டுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். உங்கள் பாஸ்வேர்ட் 14 கேரக்டர்களில் அமைந்து மிகவும் ஸ்ட்ராங்காக யாரும் அணுக முடியாதபடி இருந்துவிட்டால் ஓர் ஆண்டு வரை கூட மாற்றாமல் வைத்திருக்கலாம்.

11. உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். இன்டர்நெட் மையங்கள், சைபர் கபேக்கள், பகிர்ந்து பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள், கருத்தரங்குகளில் தரப்படும் கம்ப்யூட்டர்கள், விமான மற்றும் இரயில்வே நிலையங்கள் ஆகியவற்றில் இமெயில் பார்ப்பது, பேங்க் பேலன்ஸ் கையாள்வது ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

12. எப்படிப்பட்ட பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்தினாலும் வல்லவனுக்கு வல்லவனான சில திருடர்கள் உங்கள் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கி விடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உடனே சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற ஆன்லைன் வர்த்தக மையங்களுக்குத் தெரியப்படுத்தி உங்கள் அக்கவுண்ட்டில் நீங்களாக தெரியப்படுத்தும் வரை வர்த்தகத்தை நிறுத்தச் சொல்லுங்கள். உடனே பாஸ்வேர்டை மாற்றும் வழிகளை மேற்கொள்ளுங்கள். ஏதேனும் திருடு நடைபெற்றதாகத் தெரிந்தால் உடனே அதற்கான காவல்துறை நிலையங்களில் முறையாகத் தெரிவித்து நடவடிக்க எடுக்கச் செய்யுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத்தான் பாதகமாக அமைந்திடும்.

சிறிய "பெரிய' எழுத்துக்கள்

வேர்டில் டெக்ஸ்ட் அமைத்துக் கொண்டிருக்கையில் சில குறிப்பிட்ட சொற்களை கேப்பிடல் லெட்டர்ஸ் என்னும் வகையிலான பெரிய எழுத்துக்களில் அமைக்க விரும்புகிறீர்கள் என்றால் எந்த சொற்களைப் பெரிய எழுத்துக்களில் அமைக்க விரும்புகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுத்து விட்டு Ctrl + Shift + A அழுத்தவும்.


அனைத்து எழுத்துக்களும் பெரிய எழுத்துக்களாக மாறும். மற்ற சொற்களைக் காண்கையில் இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாக இருக்கும். கேப்பிடல் லெட்டர்ஸும் வேண்டும்; ஆனால் இவ்வளவு பெரிய அளவில் இருக்கக் கூடாது.
அப்படியானால் மீண்டும் இதனைத் தேர்ந்தெடுத்து எழுத்தின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு வர வேண்டும். எந்த அளவு உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அந்த அளவில் வைத்துக் கொள்ளலாம்.


ஆனால் உங்களுக்கு இந்த தொல்லையை வழங்காமல் வேர்ட் ஒரு வழியைத் தந்துள்ளது. சொற்களைத் தேர்ந்தெடுத்து
Ctrl + Shift + K என்ற கீகளை அழுத்துங்கள். காண்பதற்கு லட்சனமான அளவில் பெரிய எழுத்துக்களில் அந்த சொற்கள் கிடைக்கும். முதலில் மிகப் பெரிய கேப்பிடல் எழுத்துக்களை அமைத்துவிட்டுத்தான் பின் இதற்கு மாற வேண்டியதில்லை. சிறிய எழுத்துக்களில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து Ctrl + Shift + K கீகளை அழுத்தினாலே அவை சிறிய கேபிடல் லெட்டர்களில் அமையும்.

வேகமாக இயங்கும் வழிகள்

கம்ப்யூட்டரில் என்னதான் வேகமாக இயங்கும் இன்டெல் சிப் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் வழிகளில் சில எக்ஸ்பி சிஸ்டத்தை மெதுவாக்கும்.

என்ன செய்தால் நமக்கு அதிக பட்ச வேகம் கம்ப்யூட்டர் இயக்கத்தில் கிடைக்கும் என்பதனை இங்கு பார்ப்போம்.


1.
ஹார்ட் டிஸ்க் சரி செய்க: விண்டோஸ் இயக்கம் தன் வேக நிலைக்குக் குறைவான வேகத்தில் இயங்கக் காரணம் ஹார்ட் டிஸ்க்கில் பைல்களைத் தேடுவதில் அதிக நேரம் செலவிடுவதாகும். ஒரு பைலை நாம் இயக்க விரும்பி அதனைக் கம்ப்யூட்டரில் கேட்டு அது நமக்கு இயக்கத்திற்கு வரும் காலத்தை Reponse Time எனக் குறிப்பிடுகிறோம். நாம் உருவாக்கும் மற்றும் அழிக்கும் பைல்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது இந்த கால அவகாசம் உயர்கிறது. இதற்குக் காரணம் அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கில் பைல்களை உருவாக்கி பின் அழித்து மீண்டும் உருவாக்கி எழுதுகையில் பைல்கள் ஒரே இடத்தில் எழுதப்படாமல் பிரித்து பல இடங்களில் எழுதப்படுகின்றன.



இவ்வாறு பிரிக்கப்படுவதனை
பிராக்மெண்ட் (Fragment) எனக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட பைல்களை மீண்டும் ஓரளவிற்கு ஒரே இடத்தில் வரிசையாக விண்டோஸ் இயக்கம் எளிதாகத் தேடிப் படிக்கும்படி அமைக்கலாம். இதனை Defragment எனக் கூறுகிறோம். இவ்வாறு அவ்வப்போது அமைத்துவிட்டால் பைல்களைத் தேடி எடுத்துத் தரும் கால அவகாசம் (Reponse Time) குறைந்துவிடும். இந்த செயல்பாட்டை மாதம் ஒரு முறையேனும் மேற்கொள்ள வேண்டும்.



இதற்கு
Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற வகையில் சென்று இயக்க வேண்டும். அவ்வாறு இயக்குகையில் எந்த டிரைவில் இந்த செயல்பாட்டை மேற்கொள்ள விரும்புகிறோமோ அந்த டிரைவை மட்டும் தேர்ந்தெடுத்து இயக்கலாம். டிரைவைத் தேர்ந்தெடுத்து பின் Analyze என்பதில் கிளிக் செய்து பின் டிபிராக் செய்திடும்படி கட்டளை கொடுக்கலாம்.


2.
டிஸ்க் எர்ரர்ஸ் (Disk Errors) : கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்கி காலம் செல்லச் செல்ல ஹார்ட் டிஸ்க்கில் பழுது ஏற்படுகிறது. தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்கை சுழற்றி சுழற்றி எழுதுகிறோம். பல முறை ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்து கையில் அதன் இயக்கத்தில் தலையிடுகிறோம். அவ்வாறு செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கின் பரப்பில் பழுது ஏற்படுகிறது. பழுது ஏற்படும் இடத்தை bad sector என அழைக்கிறோம்.



இது போன்ற இடங்கள் ஹார்ட் டிஸ்க்கின் எழுதும் மற்றும் படிக்கும் வேகத்தைத் தாமதப்படுத்துகின்றன. அல்லது தடை செய்கின்றன. குறிப்பாக டிஸ்க்கில் எழுதுவது மிகச் சிரமமாகிறது. அல்லது இயலாமல் போகிறது. இது போன்று பழுது ஏற்பட்டபின் அந்த மோசமான, எழுதுவதற்கு இயலாத இடங்களை எதுவும் எழுத முடியாத வகையில் குறிப்பிட்டு வைக்க வேண்டும்.



இதனையே detecting and repair disk errors எனக் குறிப்பிடுகின்றனர். இந்த செயலை மேற்கொள்ள Error Checking utility என்று ஒரு வசதியை விண்டோஸ் கொண்டுள்ளது. இதனை இயக்கினால் இந்த வசதி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள களைக் கண்டறிந்து சிஸ்டம் வேகமாக இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது. இதனை மேற்கொள்ள கீழ்க்காணும் படி செல்லவும்.



My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Explore தேர்ந்தெடுத்தால் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களும் கிடைக்கும். இதில் எர்ரர் செக் செய்திடத் தேவையான டிரைவினைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடவும். இந்த Properties விண்டோவில் Tools என்னும் டேபில் என்டர் அழுத்த அதில் மூன்று பிரிவுகள் கிடைக்கும்.


அவை: Error Checking, Defragmentation மற்றும் Backup ஆகும். இதில் Error Checking பிரிவில் Check Now என்பதில் கிளிக் செய்திடவும். குறிப்பிட்ட டிரைவ் செக் செய்யப்பட்டு பழுதாகி சரி செய்ய முடியாத இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை எழுத இயலாத இடங்களாகக் குறியிடப்பட்டு ஒதுக்கப்படும்.




3.
இன்டெக்ஸ் வசதி முடக்கம்: கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை பல வகைகளில் அடுக்கலாம். பெயர் வகையில், அதன் அளவு, வகை என இவை உண்டு. இந்த செயல்பாட்டினை Indexing Service எனக் கூறுகின்றனர். இந்த செயல்பாடு கம்ப்யூட்டரின் மைய இயக்கத்தில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.



இவ்வாறு வகை பிரிக்கப்படுவதனால் நாம் பைல்களைத் தேடி எடுப்பது எளிதாகிறது. ஆனால் விண்டோஸ் செயல்பாட்டின் வேகம் குறைகிறது.




உங்களால் பைல்கள் எங்கிருக்கிறது என்றும் அவற்றை தேடி எடுப்பது உங்களால் மேற்கொள்ளக் கூடிய எளிய செயல் என்றும் நீங்கள் எண்ணினால் இந்த Indexing Service – ஐ முடக்கி வைக்கலாம். இதனால் கம்ப்யூட்டருக்கு எந்த பாதகமும் ஏற்படாது. இதனை முடக்க Start கிளிக் செய்து Control Panel செல்லவும். அங்கு Add/Remove Programs ஐ இருமுறை கிளிக் செய்திடவும். பின் Add/Remove Window Components என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பட்டியலில் Indexing services என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இது ஓரளவிற்கு விண்டோஸ் இயக்க செயல்பாட்டைத் துரிதப்படுத்தும்.


4.
விண்டோஸ் டிஸ்பிளே செட்டிங்ஸ்: விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் டெஸ்க்டாப்பில் காண்பதனை அழகாக மெருகூட்டி வைத்திடும் வகையில் பல நகாசு சாதனங்கள் தரப்பட்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக நமக்குக் காட்டப்படும் மெனு பட்டியலில் பின்புறத்தில் அழகான நிழல் பட்டுத் தெரியும்படி அமைக்கலாம். மவுஸ் பாய்ண்டரில் சிறிய அளவிலான அனிமேஷன் வரும்படி அமைக்கலாம்.


மவுஸ் பாய்ண்ட்டரையே வாழப்பழம் உரிப்பது போலவும் குதிரை ஒன்று ஓடுவது போலவும் மாற்றலாம். ஆனால் இந்த மாற்றங்கள் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையான சக்தியை நிறைய எடுத்துக் கொள்கின்றன. இதனால் சிஸ்டத்தின் முக்கிய செயல்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த மாற்றங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் இல்லாமலும் உங்கள் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப் சிறப்பாகவே தோற்றமளிக்கும்.


5.
போல்டர் பிரவுசிங்: ஒவ்வொரு முறை மை கம்ப்யூட்டர் வழியாக போல்டர்களை பிரவுஸ் செய்திட முயற்சிக்கையில் அவை கிடைக்க சிறிது தாமதமாவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இதற்குக் காரணம் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்புளோரரை நீங்கள் திறக்கையில் ஒவ்வொருமுறையும் தானாகவே நெட்வொர்க் பைல்கள் மற்றும் பிரிண்டர்களைத் தேடி அறிகிறது. இதனால் போல்டர்கள் கிடைக்க தாமதமாகிறது. இதனைச் சரி செய்து பிரவுஸ் செய்திடும் வேகத்தை அதிகப்படுத்த "Automatically search for network folders and printers” என்ற ஆப்ஷனை இயங்காமல் தடுத்து அமைத்திடலாம்.


6.
எழுத்து வகைகளை எடுத்துவிடுதல்: எழுத்து வகைகள் (Fonts) நம் டாகுமெண்ட்களை அழகாக எழுத நமக்கு உதவுகின்றன. ஆனால் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையான சக்தியை இவை நிறைய எடுத்துக் கொள்கின்றன. குறிப்பாக TrueType fonts அதிகமாகவே எடுத்துக் கொள்கின்றன. எனவே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எழுத்து வகைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை இன்னொரு போல்டரில் வேறு பெயரில் (Addl Fonts) வைத்துக் கொள்ளலாம். Control Panel சென்று Fonts போல்டரில் உள்ள இந்த தேவையற்ற Fonts பைல்களை மேலே சொன்னபடி இன்னொரு போல்டரில் காப்பி செய்து வைத்துவிடவும். தேவைப்படும்போது இவற்றை மீண்டும் Fonts போல்டருக்குக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். எந்த அளவிற்கு குறைக்கிறீர்களோ அந்த அளவிற்கு சிஸ்டத்தின் இயக்க வேகம் அதிகரிக்கும்.


மேற்கண்ட வழிகளுடன் சில புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து அவற்றை இயக்குவதன் மூலமும் விண்டோஸின் இயக்க வேகத்தை அதிகப்படுத்தலாம். ஆனால் இந்த புரோகிராம்களைச் சரியாக இயக்காவிட்டால் அல்லது இவற்றுடன் வைரஸ் போன்ற புரோகிராம்களும் இணைந்து வருவதால் அவற்றை இங்கு குறிப்பிடவில்லை. எனவே மேலே குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றி விண்டோஸ் சிஸ்டம் இயங்குவதனை துரிதப்படுத்துங்கள்.