Saturday, June 28, 2008

பைல் டீடெய்ல்ஸ் செட் செய்யலாமா?


உங்களுடைய பைல் அல்லது போல்டர் குறித்த தகவல்களை நீங்கள் எப்போதாவது தேடியதுண்டா? அது எப்போது தயாரிக்கப்பட்டது? எப்போது மீண்டும் எடிட் செய்யப்பட்டது? யார் அதனைத் தயாரித்தது? பைல் எந்த வகையைச் சார்ந்தது? போன்ற இன்னும் பல விவரங்கள் குறித்து அறிய வேண்டும் என ஆசை உண்டா? உண்டு என்றால் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

போல்டரில் உள்ள பைல்களை Details வகையில் பார்க்கும் போது பைலின் பெயர், அளவு, வகை மற்றும் இறுதியாக எடிட் செய்யப்பட்ட தேதி ஆகியவை காட்டப்படுகின்றன. இதற்கு மேலும் விபரங்கள் தேவை என்றால் காட்டப்படும் விதத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கு Start அழுத்தி கிடைக்கும் கட்டங்களில் My Documents என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் தகவல்கள் தேவைப்படும் பைல் அல்லது போல்டரை சிங்கிள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தபின் மெனு பார் சென்று View மெனுவில் கிளிக் செய்திடவும்.

பின் ஸ்குரோல் வீலைச் சுழற்றி கீழாக Choose Details என்று இருக்கும் இடத்தில் மீண்டும் கிளிக் செய்திடவும். இப்போது Choose Details டயலாக் பாக்ஸ் உங்களுக்குக் கிடைக்கும். இதில் பல்வேறு (44) வகை தகவல்களுக்கான லேபிள்கள் அடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு எவை எல்லாம் வேண்டுமோ அதற்கான கட்டங்களில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தலாம். தேவையற்றதற்கான லேபிள்களின் டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் எந்த வரிசையில் காட்டப்பட வேண்டும் என்பதனை நீங்கள் நிர்ணயம் செய்துவிடலாம். இதற்கு Move Up அல்லது Move Down பட்டனை அழுத்தி அமைக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை காட்ட வேண்டுமா அல்லது மறைக்க வேண்டுமா என்பதனையும் முடிவு செய்திடலாம். இதற்கு Show அல்லது Hide பட்டனை அழுத்த வேண்டும். எல்லாம் செட் செய்த பின் ஓகே கிளிக் செய்திடுங்கள்.

விண்டோவை நகர்த்துவது எதற்கு?


விண்டோவை நகர்த்துவதா? எதற்காக? மேலே படியுங்கள். கீழ்க்காணும் சூழ்நிலையை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். மானிட்டர் திரையில் நீங்கள் பிரவுசிங் செய்து கொண்டிருக்கும் தளத்தின் காட்சி தெரிகிறது. அதற்கு முன்னால் நீங்கள் உருவாக்கிக் கொண்டிருந்த வேர்ட் டாகுமெண்ட்டும் பின்னால் உள்ளது.

இரண்டையும் திரையின் முழு அளவில் திறந்து வைத்திருப்பதால் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் பார்க்க முடியும். ஒரு விண்டோவினைத் தள்ளி வைத்து இன்னொன்றைப் பார்க்க வேண்டும் என்றால் ஒன்றும் செய்ய முடியாதே?. அல்லது டெஸ்க்டாப் திரையில் இருக்கும் ஐகான் ஒன்றைக் கிளிக் செய்து இன்னொரு புரோகிராமினை இயக்க வேண்டும் என்றால் முடியாதே?

கவலைப்படாதீர்கள். இதனை ஒரு சிறிய விஷயத்தை செட் செய்வதன் மூலம் சீராக்கி விடலாம். எந்த விண்டோவினை நகர்த்த எண்ணுகிறீர்களோ அதனை restore down செய்திடுங்கள். அது என்ன என்கிறீர்களா? ஒரு பைல் திறந்திருக்கையில் மேலாக வலது மூலையில் மூன்று கட்டங்கள் தெரிகிறதா? அதில் மினிமைஸ் பட்டனுக்கும் குளோஸ் பட்டனுக்கும் நடுவில் உள்ளதே அதுதான் ரெஸ்டோர் பட்டனாகும். இதனைக் கிளிக் செய்தால் அந்த விண்டோ சிறியதாகும்.

இதனால் நீங்கள் அதில் செயல்படுவது பாதிக்கப்படாது. இது சிறியதான பிறகு இதன் தலையில் மவுஸின் கர்சரை வைத்து இழுத்து விண்டோவினை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். அடுத்த புரோகிராமினையும் இதே போல் ரெஸ்டோர் டவுண் செய்திட்டால் இந்த இரண்டு விண்டோக்களையும் சிறியதாக்கி திரையில் வைத்து டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களையும் இயக்கலாம். ஒன்றிலிருந்து டெக்ஸ்ட், படங்கள் மற்றும் பிற டேட்டாக்களை அப்படியே இழுத்து வந்து இன்னொன்றில் இடலாம். மிக எளிதாக இருக்கிறது அல்லவா? இந்த வசதியைப் பயன்படுத்தி பைல்களிடையே கூடு விட்டு கூடு பாய்ந்திடுங்கள்.

கம்ப்யூட்டர் பயன்பாட்டு குறிப்புகள்


சிறுவயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது.

எனவே அவரவருக்கு எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறதோ அதனை மட்டும் தேடிப் பிடித்து கற்றுக் கொள்கிறோம். இணைய தளம் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். டிஜிட்டல் போட்டோ எடுத்து அவற்றை கம்ப்யூட்டரில் இணைக்க முயற்சிக்கிறீர்கள்.

எடுத்த போட்டோக்களை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். இதற்கெல்லாம் உதவிக் குறிப்புகளை நாடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கென உள்ள இந்த தளம் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய உதவியினை வளமாக நல்ல டுட்டோரியல் பாடங்களாகப் பதிந்து வைத்து இந்த இணையதளம் தருகிறது. இதன் முகவரி http://www.goodtutorials.com/

13 பிரிவுகளாக இந்த வழிகாட்டும் தளங்கள் உள்ளன. அவை : CSS, Flash, HTML, Illustrator, Java, JavaScript, Maya, Photography, Photoshop, PHP, Ruby, Ruby on Rails and 3ds Max என பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் புதியதாக பதியப்பட்ட 15 உதவித் தளங்களின் பட்டியல் காணப்படுகிறது. நான் பார்த்த போது போட்டோ ஷாப்பிற்கான இன்டர்பேஸ் குறித்த டுடோரியல் காணப்பட்டது.

இதனைத் திறந்து பார்க்கையில் போட்டோ ஷாப் குறித்து பல செய்திகள் கிடைத்தன. இந்த உதவிக் கட்டுரைகளின் கீழாக மேலும் பல உதவி தரும் தளங்களுக்கான லிங்க்குகள் உள்ளன. அவற்றையும் கிளிக் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதன் கீழ் சில பிரிவுகளும் உண்டு. அவை: Rating, Clicks, Comments, Save, Share and Report. இந்த தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

எந்த கட்டுரையை சேவ் செய்திட வேண்டுமென்றால் சேவ் டேபைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். அப்போது இன்னொரு லிங்க் தரப்பட்டு அங்கு சேவ் செய்யப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இந்த கட்டுரைகள் சேவ் செய்யப்பட்டு இருக்கும். உங்கள் அக்கவுண்ட்டை ஏற்படுத்த இந்த தளத்தில் பதிவு செய்வதும் எளிது. நிச்சயமாய் இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இன்றே இந்த தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம் உங்கள் பேவரிட் தளப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.

இந்த செய்தியை எழுதும் போது இந்த தளத்தில் 25,049 டுடோரியல்கள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.