Wednesday, August 6, 2008

வேர்டில் ஊ2 கீயின் சிறப்பு பயன்பாடு

டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்?

டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட் செய்கிறீர்கள். எப்படிப் பார்த்தாலும் இது பல நிலைகளில் மேற்கொள்கிற சமாச்சாரமாக இருக்கிறது. இதற்கு ஓர் எளிய வழியை எப்2 கீ தருகிறது. இங்கும் முதலில் நகர்த்த வேண்டிய டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இங்கும் மவுஸ் வேண்டாம் என்றால் ஷிப்ட் கீயுடன் ஆரோ கீயைச் சேர்த்து இயக்கி டெக்ஸ்ட்டை செலக்ட் செய்திடலாம். செலக்ட் ஆனவுடன் எப்2 கீயை அழுத்துங்கள். அதன் பின் ஆரோ கீ அல்லது பேஜ் அப் அல்லது டவுண் அழுத்தி தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை எங்கு அமைக்க வேண்டுமோ அங்கு செல்லுங்கள். (இப்படிச் செல்லும்போது டெக்ஸ்ட் நகர்த்தும் வேலை வேண்டாம் என்று நினைத்தால் எஸ்கேப் கீயை அழுத்துங்கள்; எல்லாம் ரத்தாகிவிடும்.) இனி எந்த இடத்தில் டெக்ஸ்ட் அமைக்க வேண்டுமோ அந்த இடம் வந்தவுடன் ஜஸ்ட் என்டர் கீயைத் தட்டுங்கள். டெக்ஸ்ட் அந்த இடத்தில் வந்தமர்ந்துவிடும். இது கட் அண்ட் பேஸ்ட் வழிக்கு இன்னொரு செயல்வழியாகும். காப்பி அல்ல.

நீங்களே உங்கள் மெனுவை தயாரிக்கலாம்!

வேர்ட் தொகுப்பில் உள்ள மெனுவினை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ள இந்த பகுதியில் பல டிப்ஸ்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் படித்து பலரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்து தாங்கள் பயன்படுத்துவதோடு தங்கள் நண்பர்களிடமும் காட்டி மகிழ்கின்றனர். எடுத்துக் காட்டாக ஒருவர் என்னிடம் உங்களுக்கு வேர்டில் பைல் மெனுவைத் திறந்தால் எத்தனை பைல்கள் கீழாகப் பட்டியலிடப்படும் என்று கேட்டார்.

நான் வழக்கம்போல அவரையும் அவர் கம்ப்யூட்டரையும் அப்பாவியாகப் பார்த்தேன். என் கம்ப்யூட்டரில் 9 பைல்கள் கிடைக்கும் என்றார். அப்படியா! காட்டு என்றவுடன் வேர்டைத் திறந்து பைல் மெனுவினைக் காட்டினார். பின் ஒரு வெற்றி சிரிப்புடன் கம்ப்யூட்டர் மலரில் போட்டிருந்தார்கள் என்றார். இப்படி மெனுக்களை நமக்கேற்றபடி வளைக்காமல் நாமே நம் வசதிக்கேற்ப மெனுக்களை உருவாக்கினால் என்ன! உருவாக்கலாமா! அதற்கேற்ற வழிகளை இங்கு பார்ப்போம்.

இதற்கு Customize windowI ஐ முதலில் பெற வேண்டும். இதனைப் பெற Tools மெனு சென்று Customize ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது எந்த டூல்பாரிலாவது ரைட் கிளிக் செய்து அதில் Customize என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். Customize விண்டோ திறக்கையில் Commands டேப் செல்லவும். இடது பக்கமாக Categories list பட்டியல் கிடைக்கும். இந்த பட்டியலில் கீழாகச் சென்று New Menu என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நியூமெனு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மவுஸ் பாய்ண்ட்டரை கமாண்ட்ஸ் லிஸ்ட்டில் வலது பக்கமாகக் கொண்டு செல்லவும். இப்போது New Menu கட்டளையை அப்படியே கஸ்டமைஸ் விண்டோவிலிருந்து இழுத்துச் சென்று புரோகிராம் விண்டோவின் மேலாக விடவும். அல்லது இங்கே இருக்கின்ற மெனுக்களில் ஏதாவது ஒரு இடத்தில் விட்டுவிடவும். இப்போது மெனு பட்டியலில் New Menu என ஒரு மெனு இருப்பதனைக் காணலாம். கஸ்டமைஸ் விண்டோ இன்னும் திறந்திருக்கும் நிலையில் New Menu பெயரின் மீது ரைட் கிளிக் செய்திடவும். அங்கு எழும் பாப் அப் மெனுவில் “Name” என்று ஒரு பீல்டு இருக்கும். அதில் கிளிக் செய்து ஒரு புது பெயர் தரவும். உங்களுக்குப் பிடித்த நீங்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் ஒரு பெயராக இருக்கலாம். இனி என்டர் கீயைத் தட்டுங்கள். ஆஹா! பாராட்டுக்கள். உங்களுக்காய் நீங்களே ஒரு மெனுவினை பில்கேட்ஸின் விண்டோஸுக்குள் உருவாக்கிவிட்டீர்களே. இனி கஸ்டமைஸ் விண்டோவில் உள்ள கமாண்ட் டேபைப் பயன்படுத்தி என்னவெல்லாம் உங்கள் நியூ மெனுவில் இருக்க வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அவை அனைத்தையும் தேடிப் பிடித்து இழுத்து போடவும். ஆசையில் நிறைய கமாண்ட்ஸைப் போட்டுவிட்டீர்களா! அப்படியானால் அவற்றை இரண்டாகப் பட்டியலிடலாமே! மெனுவில் உள்ள கமாண்ட் ஒன்றில் ரைட் கிளிக் செய்து அதில் Begin A Group என்பதில் கிளிக் செய்திடவும். இந்த மெனுவில் உள்ளவற்றில் அதில் கர்சரைக் கொண்டு சென்று இழுத்து எப்படி வேண்டுமானாலும் வரிசையை அமைத்துக் கொள்ளலாம். எனவே பொறுமையாக எப்படி அமைத்தால் நன்றாக இருக்குமோ அப்படி அவற்றை வகைப் படுத்தவும். இதில் எப்போது மாற்றங்கள் ஏற்படுத்த விரும் புகிறீர்களோ அப்போதெல்லாம் மேலே கூறியபடி மெனுவிற்குள் சென்று மாற்றங்களை ஏற்படுத்தி சேவ் செய்து கொள்ளலாம். நிச் சயம் இது போல புதிய மெனுவினை நீங்கள் எல்லாரும் ஏற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா!

இந்த எழுத்து எங்கு இருக்கும்?

எப்போதாவது நமக்கு கிடைக்கும் ஒரு சில படங்களில் காணப்படும் எழுத்து வகைகள் நம்மை ரசிக்க வைக்கும் அளவில் காட்சி தரும். இந்த பாண்ட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவோம். ஆனால் அந்த பாண்ட் பெயர் என்னவென்று தெரியாமல் எப்படி தேடுவது? இதற்கு வழி காட்டுகிறது ஓர் இணைய தளம். அதன் முகவரி: http://www. myfonts.com/WhatTheFont/
இந்த தளம் எப்படி செயல்படுகிறது? வெகு எளிது.

முதலில் எந்த டெக்ஸ்ட்டில் உள்ள எழுத்து அல்லது படத்தில் இணைந்த எழுத்து குறித்து சந்தேகம் உள்ளதோ அதன் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்கேன் செய்திடாமல் பட பைலாக இருந்தால் இன்னும் வசதி. இந்த தளத்தைத் திறந்து உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்கேன் செய்யப்பட்ட பைல் அல்லது இமேஜ் பைலை அப்லோட் செய்திடுங்கள். அதற்கு இந்த தளத்திலேயே வசதி உள்ளது. உடன் இந்த தளம் அந்த எழுத்து என்ன என்று கண்டுபிடித்துச் சொல்லும்.
இமேஜைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாக அது சரிதானா என்று உங்களிடம் கேட்கும். நீங்கள் சரியென்று தோன்றினால் உடனே அந்த எழுத்து பைல் உங்களுக்குக் கிடைக்கும். இந்த தளத்தினால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் அதனை What The Font Forum என்ற அமைப் பிற்கு அனுப்பலாம். இதன் உறுப்பினர்கள் எவரேனும் எழுத்து என்ன வகை என்று கண்டறிந்து சொல்வார்கள். எழுத்துக்கள் குறித்து தீவிரமாக செயல்படுபவர்களுக்கு இந்த தளம் ஒரு உதவிடும் தளமாகும்.