Friday, June 13, 2008

வேர்ட் : டெக்ஸ்ட்டுக்கு மட்டுமல்ல

வேர்டில் சொற்களை மட்டுமின்றி படங்களையும் கிராபிக்ஸ் உருவங்களையும் கையாளலாம். டெக்ஸ்ட் மட்டுமே உள்ள டாகுமெண்ட் அல்லாமல் படங்கள் நிறைந்த டாகுமெண்டரியும் உருவாக்கலாம். எளிதாக நிறைவேற்ற வேர்ட் தொகுப்பு பல வசதிகளைத் தந்துள்ளது.


இந்த தொகுப்பில் படங்களையும் அழகாக அமைத்து டாகுமெண்ட்டுகளை உருவாக்கலாம். அது குறித்து இங்கு காண்போம். வேர்டில் சொற்களை மட்டுமின்றி படங்களையும் கிராபிக்ஸ் உருவங்களையும் கையாளலாம். டெக்ஸ்ட் மட்டுமே உள்ள டாகுமெண்ட் அல்லாமல் படங்கள் நிறைந்த டாகுமெண்டரியும் உருவாக்கலாம். இதனை எளிதாக நிறைவேற்ற வேர்ட் தொகுப்பு பல வசதிகளைத் தந்துள்ளது. இதனை மிகவும் எளிதாக மாற்றுவது நீங்கள் இந்த வசதிகளைப் புரிந்து கொண்டு உங்கள் கைப் பழக்கத்தில் கொண்டு வருவதில்தான் உள்ளது. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்


கிளிப் ஆர்ட் (Clipart) : டாகுமெண்ட்களில் பயன்படுத்துவதற்காக இமேஜஸ் என்னும் படங்கள் கொண்ட லைப்ரேரி இது. வேர்டில் Insert மெனு சென்று அதில் கிடைக்கும் Picture மெனுவில் Clipart ஐப் பெறலாம். நீங்கள் வேர்ட் 2000 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்துபவராயிருந்தால் கிளிப் ஆர்ட் டயலாக் பாக்ஸ் பெறலாம். அதற்குப் பிந்தைய பதிப்புகளில் வலது பக்கம் கிளிப் ஆர்ட் சைட் பார் கிடைக்கும். கிளிப் ஆர்ட் லைப்ரேரியில் உள்ள படங்கள் அனைத்தும் கேடகிரி என்னும் வகையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இது படங்களைத் தேடி எடுக்க உதவுகிறது.

இதில் உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில் நீங்கள் விரும்பும் படத்தின் தீம் அல்லது அது குறித்த ஒரு சொல்லை டைப் செய்து என்டர் செய்தால் உடன் நீங்கள் குறிப்பிட்ட பொருள் குறித்த அனைத்து படங்களும் காட்டப்படும். வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் இந்த படங்களைப் பயன்படுத்த எந்த படத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ அந்த கட்டத்தில் வலது ஓரத்தில் காணப்படும் அம்புக் குறியில் கிளிக் செய்தால் சிறிய மெனு ஒன்று விரியும். இதில் படத்தைக் காப்பி செய்வதற்கும் அப்படியே டாகுமெண்ட்டில் இடைச்செருகலாக அமைப்பதற்கும் இன்னும் பல செயல்பாடுகளுக்குமான கட்டளைச் சொற்கள் இருக்கும். தேவையானதைக் கிளிக் செய்திடலாம்.

இங்கு நீங்கள் எதிர்பார்த்த படம் கிடைக்கவில்லை என்றால் ‘Clip art on Office Online’ என்பதில் கிளிக் செய்தால் மைக்ரோசாப்ட் நிறுவனத் தளத்தில் உள்ள படங்களை இலவசமாகப் பெறலாம். இந்த படங்களைப் பெற இணையத் தொடர்பில் நீங்கள் இருக்க வேண்டும். அங்கு படங்களைத் தேர்ந்தெடுத்தால் அவை தானாகவே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கிளிப் ஆர்ட் பிரிவில் சேர்க்கப்படும்.

படத்தைத் தேர்ந்தெடுத்து அதனை வேர்ட் டாகுமெண்ட்டில் கொண்டு சென்றால் அந்த படத்தினை எடிட் செய்திட வேர்ட் பல வசதிகளைத் தருகிறது. படத்தின் நடுவே கிளிக் செய்து அதனை வேர்ட் டாகுமெண்ட்டின் எந்த இடத்திற்கும் இழுத்துச் செல்லலாம். நான்கு பக்கமும் கிடைக்கும் ஹேண்டில்களை மவுஸ் கர்சரால் இழுத்து படத்தின் அளவை குறைக்கவும் அதிகப்படுத்தவும் செய்திடலாம். படத்தில் இருமுறை கிளிக் செய்திடுகையில் வேர்ட் பிக்சர் டூல் பார் என்னும் வசதியையும் தருகிறது. இதன் மூலமும் நாம் படத்தை ஒழுங்கு செய்து அமைக்கலாம். படத்தின் ஒரு பகுதி வேண்டும் என்று திட்டமிட்டால் அப்படியே அதனை மட்டும் கட் செய்து அமைக்கலாம்.

போட்டோ மற்றும் படம்: கிளிப் ஆர்ட் படங்களே வேண்டாம் என்று எண்ணினால் நீங்கள் வரைந்த படம், ஸ்கேன் செய்த படம் அல்லது போட்டோ என எந்த பிக்சர் பைலையும் வேர்ட் டாகுமெண்ட்டில் இணைக்கலாம். ஏற்கனவே சொல்லப்பட்ட பிக்சர் மெனுவில் From File என்ற பிரிவில் கிளிக் செய்து பட பைல்களைக் கொண்டு வரலாம். இதனைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் பிரவுசிங் ஆப்ஷன் பெற்று கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் எங்கு நீங்கள் விரும்பும் படம் அல்லது போட்டோ பைல் உள்ளதோ அதனை செலக்ட் செய்து இணைக்கலாம்.

இவ்வாறு இணைக்கப்பட்ட படங்களுக்கு தலைப்புகள் கொடுக்க வேண்டுமா? இன்ஸெர்ட் மெனுவில் டெக்ஸ்ட் பாக்ஸ் ஆப்ஷனைப் பயன்படுத்தி தலைப்பை டைப் செய்திடலாம். டெக்ஸ்ட் பாக்ஸ் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தவுடன் கர்சர் சிறிய கிராஸ் ஹேர் ஐகானாக மாறும். அதைக் கொண்டு டெக்ஸ்ட் பாக்ஸ் கட்டத்தை அமைத்து பின் உள்ளே டைப் செய்திடலாம். இந்த டெக்ஸ்ட் பாக்ஸை எந்த இடத்திற்கும் நகர்த்தி அமைக்கலாம். இந்த டெக்ஸ்ட் பாக்ஸையும் மிகவும் கவர்ச்சிகரமாக வண்ணத்திலும் பல வகை எபெக்டிலும் அமைக்கலாம்.

ஷேப்கள் என்னும் படங்கள்: இன்ஸெர்ட் கொடுத்து பிக்சர் மெனு செல்கையில் கிடைக்கும் இன்னொரு பிரிவு Autoshapes ஆகும். நட்சத்திரம், இதயம், சதுரம், நீள் சதுரம், வட்டம், பலவகையான அம்புக்குறி என பல ஷேப்களை வேர்ட் டாகுமெண்ட்டில் இணைக்கலாம். Insert, Picture, Autoshapes என வரிசையாகத் தேர்ந்தெடுத்த பின் ஆட்டோ ஷேப் டூல் பார் திரையில் காட்டப்படும். இந்த ஷேப்கள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். ஏதேனும் ஒரு பட்டனில் கிளிக் செய்து ஒரு ஷேப்பைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மீது மவுஸ் கர்சரால் அழுத்திப் பிடித்தவாறே இழுத்து வேர்ட் டாகுமெண்ட்டில் விட்டு விடலாம்.

பின் முன்பு கூறியபடி இதன் மீது கிளிக் செய்து பிக்சர் டூல் பார் மூலம் இதன் அகலம், உயரத்தை மாற்றலாம். ஷேப்பையும் மாற்றலாம். ஷேப் மீது ரைட் கிளிக் செய்தால் Format Autoshape என்ற டூல் பார் கிடைக்கும். இதன் மூலம் ஷேப்பினை எடிட் செய்திடலாம். இந்த டூல் பாரின் இடது ஓரத்தில் பிடித்து இழுத்து இதனை டாகுமெண்ட்டில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் நமக்கு வசதியாக இருக்க வைக்கலாம்.

வேர்ட் ஆர்ட்: படங்களைக் கையாள்வதில் நான்காவதாக நமக்குக் கிடைக்கும் பிரிவு வேர்ட் ஆர்ட் ஆகும். Insert, Picture சென்று Wordart Gallery ஐப் பெறலாம். இதில் பல்வேறு வகையிலான டெக்ஸ்ட் ஸ்டைல் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்த டெக்ஸ்ட் ஸ்டைல் தேர்ந்தெடுத்து பின் கிடைக்கும் கட்டத்தில் டெக்ஸ்ட் அமைக்கலாம். தேர்ந்தெடுத்த ஸ்டைலில் டெக்ஸ்ட் உருவாகும். பின் இதனையும் அளவு மற்றும் பிற பரிமாணங்களை மாற்றி இழுத்துச் சென்று நீங்கள் விரும்பும் இடத்தில் அமைக்கலாம்.

மேலே குறிப்பிட்டவை தவிர மேலும் சில வழிகளில் படங்களை வேர்ட் தொகுப்பிற்குள் கொண்டு வரலாம். டிஜிட்டல் கேமராவினை இணைத்து அதில் எடுத்த படங்களைக் கொண்டு வரலாம். அல்லது ஸ்கேனரில் ஸ்கேன் செய்த படங்களையும் இணைக்கலாம். பல வெப் சைட்டுகளில் கிளிப் ஆர்ட் படங்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. இவற்றில் இருந்தும் தேடி எடுத்து கம்ப்யூட்டரில் பதிந்து வைத்தும் பயன்படுத்தலாம். இனி நீங்கள் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்களில் நிறைய படங்களை எதிர்பார்க்கலாமா? முதலில் உங்கள் படத்தை அமைத்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

No comments: