Friday, June 13, 2008

வீடியோவை ரசிக்கலாமா?


பிராட் பேண்ட் இணைப்பு மற்றும் யு–ட்யூப் இணைய தளம் ஆகியவற்றால் வெப் வீடியோ என்ற இணையதள படக் காட்சிகள் இன்று மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. இவற்றை எப்படிப் பெற்று ரசிப்பது என்பதனை இங்கு காணலாம்.

யு – ட்யூப் போன்ற வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு வழி வகுக்கும் இணைய தளங்கள் மற்றும் அதிவேக பிராட்பேண்ட் இணைப்புகள் போன்ற வசதிகள் கிடைக்கப் பெறத் தொடங்கியதில் இருந்து வெப்சைட்டில் இருந்து வீடியோ காட்சிகளை டவுண் லோட் செய்திடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

அதே போல தங்களிடையே உள்ள பகிர்ந்து கொள்ளக் கூடிய வீடியோ காட்சிகளை இணையத்தில் பதிப்பதும் அதிகரித்து வருகிறது. வெப் வீடியோ என்று பொதுவாக இவற்றை அழைத் தாலும் மியூசிக் வீடியோஸ், திரைப்படங்கள், கேம்ஸ் ட்ரெய்லர்கள், குறும்படங்கள் ஆகியவை இவற்றின் பல்வேறு பரிமாணங் களாகக் கிடைக் கின்றன. இந்த வீடியோ பைல்களை உங்கள் பிரவுசர் வழியாக ஸ்ட்ரீமிங் செய்திடலாம்; அல்லது டவுண்லோட் செய்து மீடியா பிளேயர் சாப்வேர் புரோகிராம் மூலமாக இயக்கி ரசிக்கலாம்.

ஸ்ட்ரீமிங் / டவுண்லோடிங்:

வெப் சைட் ஒன்றில் அமைக்கப் பட்டுள்ள வீடியோ காட்சியினை உங்கள் பிரவுசர் மூலம் காணலாம். ஒரு பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பில் இந்த காட்சி உடனடியாக இயங்கத் தொடங்குகிறது. இதற்குக் காரணம் ஸ்ட்ரீமிங் (Streaming) எனப்படும் தொழில் நுட்பமே. இதன் மூலம் வீடியோ பைலிலிருந்து டேட்டா கிடைத்தவுடனேயே அது இயக்கப்பட்டு படக் காட்சி நமக்குக் கிடைக்கிறது. அந்த பைலின் தகவல்கள் அனைத் தும் கம்ப்யூட்டரில் இறங்கு முன்னரே அது நடக்கிறது. நாம் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மீத டேட்டாவும் இறக்கப்படுகிறது. இந்நிலையில் பிரவுசர் மூடப்படுமானால் அல்லது இன்டர் நெட் தொடர்பு நிறுத்தப்படுமானால் இறங்கியவரை காட்சி கிடைக்கிறது.

மீண்டும் முதலில் இருந்து பார்க்க வேண்டுமானால் அந்த தளத்திற்குச் சென்று படக் காட்சிக்கான தொடர்பில் கிளிக் செய்து காண வேண்டும். ஆனால் இதே வீடியோ காட்சியை, அதன் பைலை, டவுண்லோட் செய்திடுகையில் அந்த பைல் முழுவதுமாக இறக்கப்பட்டு கம்ப்யூட்டரில் சேவ் செய்திடும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் எத்தனை முறை வேண்டுமானாலும் இன்டர்நெட் இணைப்பில்லாமல் பிரவுசரின் துணை இல்லாமல் வீடியோ காட்சியினை மீடியா பிளேயரில் இயக்கிக் காணலாம். பல வெப் சைட்டுகள் நீங்கள் கம்ப்யூட்டரில் சேவ் செய்திட முடியாத ஸ்ட்ரீமிங் வீடியோக்களை மட்டும் இலவசமாகத் தருகின்றன. ஒரு சில வெப்சைட்டுகளே இறக்கிப் பின்னர் காணும் வகையில் பைலை டவுண் லோட் செய்திடும் வசதியைத் தருகின்றன. இது போல டவுண் லோட் செய்திடக் கூடிய வீடியோ பைல்களுக்கு பல இணைய தளங்கள் கட்டணம் வசூலிக்கின்றன.

எங்கு பெறலாம் வீடியோக்களை?

இத்தகைய வீடியோ காட்சிகளை பிரபலப்படுத்தி வெற்றி கண்ட தளம் யு–ட்யூப் ஆகும். இந்த தளத்தில் மற்றவர்களின் வீடியோ காட்சிகளை நீங்கள் காணலாம். அந்த வீடியோக்கள் குறித்த உங்கள் கருத்துக்களைப் பதியலாம். அத்துடன் உங்கள் கருத்துக்களை வெப் கேமரா மூலம் பதிந்து அதே தளத்தில் பதியலாம். இதில் என்ன வகையில் வீடியோ காட்சிகள் உள்ளன என்று தேடுதல் மூலம் தெரிந்து கொள்ளலாம். நகைச்சுவை, பொழுதுபோக்கு, மியூசிக் எனப் பல வகைகளில் இவை உள்ளன. இந்த சொற்களைத் (Comedy, Entertainment மற்றும் Music) தந்து தேடி இவற்றைப் பெறலாம்.

யு–ட்யூப் போன்ற தளங்களில் உள்ள வீடியோ காட்சிகள் நம் பிரவுசரில் பிளாஷ் பிளேயரின் (Flash player) துணையுடன் இயக்கப்படுகின்றன. இவற்றில் முதன்மையானது அடோப் பிளாஷ் பிளேயர். இது அனிமேஷன் படங்களுக்கும் அடிப்படையில் தேவையானது. பெரும்பாலான வெப் சைட்கள் இதன் அடிப்படையிலேயே தங்களின் தளங்களில் அனிமேஷன் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை அமைத்து தருகின்றன. எனவே தான் இந்த தளங்களைக் காண முயற்சிக்கையில் உங்கள் கம்ப்யூட்டரில் பிளாஷ் பிளேயர் இல்லை என்றால் அதனைப் பதிய வேண்டியதின் அவசியத்தை எடுத்துச் சொல்லி பதியவா என்று அந்த தளம் ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்கும். சரி என்று ஓகே கொடுத்தால் தான் அது பதியப்பட்டு காட்சிகள் நமக்குக் கிடைக்கும். அடோப் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாஷ் பிளேயர் தொகுப்பை www.adobe.com/software/flashplayer என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்குமதி செய்திடலாம்.

யு–ட்யூப் தளத்தில் ஏதாவது ஒரு வீடியோ உங்களின் ஆர்வத்தினைத் தூண்டுவதாக இருந்தால் அந்த தொடர்பில் கிளிக் செய்திட வேண்டும். உடனே நீங்கள் இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வீடியோ தானாகவே இயக்கப்படுவதனைக் காணலாம். இந்தக் காட்சியினை நீங்கள் கண்டு மகிழ்வது மட்டுமின்றி அதனை ரேட்டிங் என்ற முறையில் மதிப்பிடலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம். இவ்வகையில் யு–ட்யூப் தளம் மிகவும் பிரபலமான தளம் என்றாலும் வேறு சில தளங்களும் இத்தகைய வீடியோக்களைத் தருகின்றன.

திரைப் படங்களின் ட்ரெய்லர் படங்களைப் பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் www.apple.com/trailers என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். மூவி ட்ரெய்லர்கள் பெரும்பாலும் QuickTime என்ற movie (or mov) பார்மட்டைப் பின்பற்று கின்றன. எனவே இத்தகைய வெப் சைட்டுகளுக்குச் செல்கையில் குயிக் டைம் சாப்ட்வேர் தொகுப் பினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவா என்ற செய்தி காட்டப்படும்.

ஆப்பிள் நிறுவனம் இவ்வகையில் iTunes என்ற சாப்ட்வேர் தொகுப்பினைத் தருகிறது. இதன் மூலம் டிவி ஷோ, வீடியோ காட்சி, ட்ரெய்லர் காட்சி என அனைத்தையும் பார்க்க முடியும். அத்துடன் இவற்றை உங்கள் ஐ–பாட் சாதனத்துடன் ஒருங்கிணைத்து அவற்றை ஐ–பாடிலும் பார்க்கலாம்.

ஸ்ட்ரீமிங் வீடியோக்களின் தன்மை: இணைய தளங்களில் வீடியோ காட்சிகளைப் பார்க்கையில் அவற்றின் தன்மை நாம் வீடுகளில் டிவிடி மூலம்மோ அல்லது டவுண்லோட் செய்த வீடியோவினப் பார்ப்பது போலவோ இருக்காது. ஏனென்றால் உங்கள் கம்ப்யூட்டருக்கு இந்த வீடியோ காட்சியை உடனுடக்குடன் அனுப்ப பைலின் அளவை சிறியதாக அமைக்க வேண்டும். இதனால் ஆன் லைனில் நாம் பார்க்கும் வீடியோ காட்சிகளின் தன்மை குறைவாகவும் காட்சி சிறியதாகவும் கிடைக்கிறது. இருப்பினும் சில தளங்களில் இந்த காட்சிகள் சிறியதாக, நடுத்தரமாக அல்லது பெரியதாக திரை முழு வதும் வேண்டுமா எனக் கேட்டு அதற்கேற்ப காட்டப்படும்.

இதிலும் படத்தின் தன்மை மிகச் சிறப்பாக இருக்கும் என உறுதி சொல்ல முடியாது. ஆன்லைனில் வீடியோ காட்சிகளைக் காண்கையில் சில நேரம் படம் அப்படியே உறைந்து நின்று பின் மீண்டும் தொடரும். இதற்குக் காரணம் படக் காட்சி தொடங்கிய பின்னர் தொடர்ந்து காட்டுவதற்கு டேட்டா இல்லாமல் இறங்கிக் கொண்டிருக்கும். காட்டுவதற்கான அளவில் டேட்டா கிடைத்தவுடன் இது தொடரும். இன்டர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக இருந்தால் இது போல அடிக்கடி நடைபெறும்.

இது போல காட்சிகளைக் காண்கையில் டேட்டா எந்த அளவிற்கு இறங்கியுள்ளது என்பதனையும் படம் எந்த அளவில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதனையும் இரு நீள கோடுகள் மூலமாகக் காணலாம். இந்த நீள பார்களில் கிளிக் செய்து வீடியோவினை பார்வேர்ட் செய்தும் பார்க்கலாம். இத்தகைய ஸ்ட்ரீமிங் வீடியோவினை கம்ப்யூட்டரில் காப்பி செய்வது பெரும்பாலும் தடை செய்யப்பட்டிருக்கும் என்றாலும் இதனையும் காப்பி செய்திட சில சாப்ட்வேர் புரோகிராம்கள் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன.

நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தினால் இணையப் பக்கங்களில் பதியப்பட்டுள்ள வீடியோ கிளிப்களை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ள வசதி தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இந்த வீடியோ படங்கள் மீது ரைட் கிளிக் செய்து அதில் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பின் மீடியா என்ற டேப்பில் என்டர் செய்திட வேண்டும். பின்னர் நாம் சேவ் செய்ய விரும்பும் வீடியோ பைலைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம்.

டவுண்லோட் வீடியோவினை பார்க்க: கம்ப்யூட்டரில் சேவ் செய்த வீடியோ பைலை இயக்கிப் பார்க்க உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் மீடியா பிளேயர், விண் ஆம்ப் அல்லது மீடியா பிளேயர் கிளாசிக் போன்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் பதியப்பட்டிருக்க வேண்டும். வீடியோ பைலை இயக்க விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கிப் பின் பைல் மெனு சென்று வீடியோ பைல் இருக்கும் இடத்திற்குச் சென்று பைலை கிளிக் செய்திடலாம். இந்த பிளேயரையே இது போன்ற வீடியோ பைல்களை இயக்கும் டிபால்ட் புரோகிராமாக மாற்றிவிட்டால் எப்போது வீடியோ பைலின் மீது கிளிக் செய்தாலும் விண்டோஸ் மீடியா பிளேயர் இயக்கப்பட்டு வீடியோ பைல் காட்சி காட்டப்படும். வீடியோ பைல்கள் avi, mov, wmv, mpg மற்றும் mpeg போன்ற பலவகை பார்மட்டுகளில் வருகின்றன. ஒரு சில பார்மட்டுகளை குறிப்பிட்ட ஒரு சில மீடியா பிளேயர்கள் இயக்காது. அப்போது வேறு மீடியா பிளேயர்களை நாட வேண்டும்.

வீடியோ ஷேரிங்: யு–ட்யூப் இணையதளம் பிரபலமானதற்குக் காரணம் அதில் வீடியோ பைல்களை அனைவரும் பகிர்ந்து கொள்ள வசதி அளித்ததுதான். வெப்கேம், கேம்கார்டர் மற்றும் மொபைல் போனில் எடுக்கப்பட்ட படக் காட்சிகள் எல்லாம் இதில் பதியப்பட்டு பகிர்ந்து பார்த்து ரசிக்கப்படுகின்றன. இதிலும் சிலர் அனுமதி பெறாத வீடியோ காட்சிகளையும் பாலியியல் காட்சிகளையும் தளங்களில் போட்டு சட்ட பிரச்னைகளை ஏற்படுத்துவதால் யு–ட்யூப் நிறுவனம் பல்வேறு வழிகளைக் கையாண்டு அவற்றை நீக்கி வருகிறது.

முன்பு இது போன்ற தளங்களில் காட்சிகளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பட நிறுவனங்கள் பல தற்போது தங்கள் படங்களின் ட்ரெய்லர் காட்சிகளையும் முழு நேர மூவிகளையும் அமைக்க ஒத்துக் கொண்டு தாங்களாகவே படங்களைப் பதித்து வைக்கின்றன. இந்தியாவிலும் இது பழக்கத்திற்கு வந்தால் கட்டணம் செலுத்தி படங்களை டவுண்லோட் செய்து பார்க்கலாம். அல்லது இலவசமாகவும் பார்க்கலாம்.


No comments: