Saturday, June 28, 2008

பிரிண்டர்களை எப்படி பராமரிப்பது?

பிரிண்டர்களைச் சரியாகப் பராமரிக்கா விட்டால் அவை அச்சடிக்கின்ற வகையில் பிரச்னை ஏற்படும். சில வேளைகளில் பிரிண்டர்கள் இயங்காமல் போகின்ற சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. எந்த வழிகளில் இவற்றை அடிக்கடி கவனிக்க வேண்டும் என்பனை இங்கு பார்க்கலாம்.

முதலாவதாக இங்க் கார்ட்ரிட்ஜ்களை சுத்தமாகவும் புதியதாகவும் வைத்திருக்க வேண்டும். நீங்கள் அடிக்கடி பிரிண்டரைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதில் உள்ள கார்ட்ரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும் மை உலர்ந்து போகும். உலர்ந்து போனால் அதனை பின் எந்த நிலையிலும் பயன்படுத்த முடியாது.

பின் புதிய கார்ட்ரிட்ஜ் தான் வாங்க வேண்டும். மை உலர்ந்து போன கார்ட்ரிட்ஜ் வாங்கிய பணம் வீண் தான்.எனவே இரு நாட்களுக்கு ஒரு முறை கருப்பு/வெள்ளை மற்றும் வண்ணங்கள் கலந்த அச்சில் அரை பக்கமாவது அச்செடுக்க வேண்டும்.

பல வேளைகளில் நாம் பிரிண்டரை மூடாமல் வைத்திருப்போம். அப்போது பிரிண்டரில் மேலாக மட்டுமின்றி உள்ளேயும் குறிப்பாக அச்சிடும் ஹெட் பகுதியில் தூசி படியும். இதனை அவ்வப்போது சரியான துணி கொண்டு சுத்தம் செய்து தூசி தொடர்ந்து படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். பிரிண்ட் ஹெட்டில் மிக மிக நுண்ணிய துளைகள் இருக்கும். இந்த துளைகள் வழியாகத்தான் கார்ட்ரிட்ஜ் மை அச்சிடும் டாகுமெண்ட்டிற்கேற்ப வெளிவந்து நமக்கு அச்சிட்ட படிவத்தைக் கொடுக்கிறது.

இந்த துளைகள் சில வேளைகளில் அதன் மீது உலர்ந்த மையினாலும் அடை படலாம். இதனை எவ்வாறு சுத்தம் செய்வது என நீங்கள் பிரிண்டர் வாங்கும்போது கொடுக்கப்பட்ட உதவிக் குறிப்பில் இருக்கும். அதனைப் பின்பற்றியே நீங்கள் ஹெட்டைச் சுத்தம் செய்திட வேண்டும். இங்க் கார்ட்ரிட்ஜிலேயே ஹெட் இருந்தால் பிரச்னை இல்லை; எடுத்து சுத்தம் செய்வது எளிதாகிவிடும். இல்லையேல் பிரிண்ட் ஹெட் இருக்கும் பகுதியில் அதற்கு செல்லும் வயர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இன்றி சுத்தம் செய்திட வேண்டும்.

பொதுவாக சுத்தமான (டிஸ்டில்டு) தண்ணீர் மற்றும் ஆல்கஹால் கொண்டு துணியை நனைத்து சுத்தம் செய்யலாம். தூசியை முதலில் சாதாரணமாகச் சுத்தம் செய்துவிட்டு பின் இந்த முறையைக் கையாள வேண்டும். மை உறைந்து ஹெட்டில் இருந்தால் இந்த முறையில் சரியாகிவிடும். உறைந்த மையைச் சரி செய்திட இன்னொரு வழியும் உண்டு. தொடர்ந்து பல பிரிண்ட்கள் எடுத்தால் உலர்ந்த மை பயன்படுத்தப்பட்டு ஹெட்டில் உள்ள துளைகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்படலாம்.

ஆனால் எத்தனை பிரிண்ட் இவ்வாறு எடுக்கப்பட வேண்டும் என்பது உலர்ந்த தன்மையைப் பொறுத்தது. சில வேளைகளில் 10 முதல் 15 முறை பிரிண்ட் எடுக்க வேண்டும். இது வீண்தான். ஆனால் வேறு வழியில்லை. மொத்தமாகக் கீழே வீணாய்ப் போட்டு பணம் போவதைக் காட்டிலும் சில பிரிண்ட்கள் வீணாக எடுப்பதில் தவறில்லை. பிரிண்ட் ஹெட்களை மட்டும் தனியே கழற்றி எடுக்கும் வகையில் பிரிண்டர் வடிவமைக்கப் பட்டிருந்தால் அதனைத் தனியே பிரித்து ஆல்கஹால் அல்லது நீர்த்த அம்மோனியா திரவத்தில் சில நிமிடங்கள் ஊற வைத்து சுத்தம் செய்யலாம். இதனை விஷயம் தெரிந்த ஒருவரைக் கொண்டு மேற்கொள்வதே நல்லது.

No comments: