Wednesday, July 9, 2008

சாதனை படைத்த பயர்பாக்ஸ்

சென்ற ஜூன் 17ல் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பதிப்பு 3 வெளியானது. கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், புதிய பல வசதிகள், தோற்றப் பொலிவு, வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப அமைக்கும் முறை எனப் பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியான இந்த தொகுப்பின் வெளியீடும் சாதனை படைத்துள்ளது. வெளியான நாளன்று அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம் என்ற பெயரை எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்தது. இதற்கான ஏற்பாடுகள் உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் மேற் கொள்ளப் பட்டு வெற்றிகரமாக இச்சாதனை மேற் கொள்ளப்பட்டது.

சாதனை தொடங்கிய ஐந்து மணி நேரத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் எக்கச்சக்க எண்ணிக்கையில் டவுண்லோட் செய்தனர். எந்த நொடியிலும் இறக்கம் செய்வது நிற்கவே இல்லை. குறிப்பிட்ட நாளில் 83 லட்சம் பேர் டவுண்லோட் செய்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. இந்தியாவிலிருந்து 2 லட்சத்து 57 ஆயிரத்து 353 பேர் பங்கு கொண்டு இந்த பிரவுசர் தொகுப்பை இறக்கிப் பயன்படுத்தினார்கள். அமெரிக்காவில் தான் மிக அதிகமாக 50 லட்சத்து 18 ஆயிரத்து 241 பேர் டவுண்லோட் செய்தனர்.


பிரிட்டனில் 7 லட்சத்து 26 ஆயிரத்து 232 பேர் கலந்து கொண்டனர். இப்படியே உலகெங்கும் உள்ள நாடுகளிலிருந்து பல லட்சம் பேர் ஆவலுடன் கலந்து கொண்டு இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ளனர். எந்த எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் என்ற தகவல்களுக்கு http://www.spreadfirefox.com/enUS/ worldrecord/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகித் தெரிந்து கொள்ளலாம்.

பயர்பாக்ஸ் சில தகவல்கள்:

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் நம்பகத்தன்மை குறைய குறைய பயர்பாக்ஸ் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு மக்கள் புதியதொரு பிரவுசரை விரும்பினார்கள். அவர்களுக்கு வேகமாகவும் பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் பல புதிய நவீன வசதிகளைத் தருவதாகவும் பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது. வெகு காலமாக பயர்பாக்ஸ் தொகுப்பு 2 பயன்படுத்தப்பட்டு வந்தது. புதிய பதிப்பு 3 பல கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு இணையாகவும் போட்டியாகவும் பல புதுமைகளைக் கொண்டதாகவும் பயர்பாக்ஸ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களை வழங்குவதில் புகழ் பெற்ற மொஸில்லா நிறுவனம் தரும் புரோகிராம் இது. ஓப்பன் சோர்ஸ் என்பதால் இதன் புரோகிராம் வரிகளைப் பெற்று யாரும் இதற்கான கூடுதல் வசதிகளைத் தரும் பிளக் இன் புரோகிராம்களை எழுதி வழங்கலாம். தொடர்ந்து இவ்வாறு பலர் வழங்கி வருகின்றனர்.

விண்டோஸ், லினக்ஸ், மேக் என பலவகை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் தனித்தனியே இவை உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இலவசமாக இதனை டவுண்லோட் செய்திட http://www.getfirefox.com என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகலாம். விண்டோஸ் சிஸ்டத்திற்கான இன்ஸ்டலேஷன் பைல் (ஆங்கிலம்) 7.1 எம்பி அளவில் கிடைக்கிறது. வெகு எளிதாக இன்ஸ்டலேஷன் நடைபெறுகிறது. ஒரு புதிய எக்ஸ்பி சிஸ்டத்தில் இது 20 நொடிகளே எடுத்துக் கொள்கிறது.

நூற்றுக்கணக்கில் பொறியியல் வல்லுநர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட தடைகளையும் பிழைகளையும் சரி செய்து பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் கொண்டு வந்துள்ளனர்.
புதிய ஜெக்கோ பிரவுசர் இன்ஜின், பல்வேறு கூடுதல் திறன் கொண்ட புதிய வசதிகள், அதிவேகத்தில் தளங்களைப் பெற்று தருதல், கம்ப்யூட்டரின் மெமரியைக் குறைந்த அளவில் பயன்படுத்துதல், வியக்க வைக்கும் அட்ரஸ் பார் எனப் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் இந்த அட்ரஸ் பாரினை ஆங்கிலத்தில் Awesome Ba என அழைக்கிறது.
நீங்கள் தேடும் வெப்சைட் முகவரி இதுவாகத்தான் இருக்கும் என சட சட வென பல தளங்களைப் பட்டியலிடும் புதிய வகை அட்ரஸ் பார் இணைய தேடலில் நமக்குக் கிடைத்திருக்கும் புதிய வசதியாகும். அட்ரஸ் பாரில் நீங்கள் முகவரியினை டைப் செய்திடும்போது ஏற்கனவே டைப் செய்த முகவரிகளை மட்டும் தான் தற்போதுள்ள பிரவுசர்கள் தருகின்றன. ஆனால் பயர்பாக்ஸ் தொகுப்பின் அட்ரஸ் பாரில் முகவரிகளை டைப் செய்திடத் தொடங்கியவுடன் பிரவுசரில் உள்ள புக்மார்க், ஹிஸ்டரியில் உள்ள தள முகவரிகள் ஆகியவற்றை அலசிப் பார்த்து இந்த சொல் உள்ள அனைத்து தளங்களின் முகவரிகளை வரிசையாகத் தருகிறது. குறிப்பிட்ட சொல் ஒரு தள முகவரியில் நடுவில் இருந்தாலும் அந்த தளம் தரப்படுகிறது. நமக்கு இதுதான் முகவரி என்று தெரிந்த நிலையில் இதுபோல் லிஸ்ட் தரப்படுவது எரிச்சலாக இருக்கும். எனவே எந்த அடிப்படையில் இந்த பட்டியல் தரப்பட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போல பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு சிஸ்டம் ரீ பூட் செய்திட வேண்டியதில்லை.
உங்களுடைய நிறுவன இணைய தளங்களில் நிறுவனத்தின் இலச்சினையைப் பதித்துவிட்டல் அவை அழகாக இணைய தளத்தின் முகவரிக்கு முன்னால் தோற்றமளிக்கின்றன. இத்துடன் வழக்கம்போல பாஸ்வேர்ட் மேனேஜர், டவுண்லோட் மேனேஜர் மற்றும் ஆட் – ஆன்ஸ் மேனேஜர் தரப்பட்டுள்ளன. வெப் ஸ்டாண்டர்ட்ஸ் ப்ராஜக்ட் என்னும் அமைப்பு இணையதளத்திற்கான தொழில் நுட்ப கட்டமைப்புகளை ஆய்வு செய்து சோதனைகளை மேற்கொண்டு சரியாக அமைக்கப்பட்டுள்ள பிரவுசர்களுக்கு சான்றளிக்கிறது. அந்த அமைப்பின் சோதனைகளில் இன்னும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தேறவில்லை; ஆனால் பயர்பாக்ஸ் தேர்ச்சி பெற்று சான்று பெற்றுள்ளது. இந்த தொழில் நுட்ப சங்கதிகளை மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8ல் நிறைவேற்றப்போவதாக அறிவித்துள்ளது.

பார்த்துக் கொண்டிருந்த தளத்தின் அந்நேர பக்கத்தை மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கும் போது அளித்தல், உள்ளாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ளும் வசதி, ஒருங்கிணைந்த தேடுதல் வசதி, பாப் அப் விண்டோக்களைத் தடை செய்தல், தனிநபர் தகவல்களை கிளியர் செய்தல், இணைய பயன்பாட்டின் பின்னணியில் தளங்களை இறக்கம் செய்தல் எனப் பல கூடுதல் வசதிகளைக் கொண்டு வந்துள்ளது பயர்பாக்ஸ் 3. அட்ரஸ் பாரில் அட்ரஸ் முடிந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ். ஐகானுக்கு முன்னால் புதிய ஸ்டார் ஐகான் ஒன்று தரப்படுகிறது. இதனை ஒரு முறை கிளிக் செய்தால் யு.ஆர்.எல். புக்மார்க்காகப் பதியப்படுகிறது. இரு முறை கிளிக் செய்தால் புக்மார்க் அப்போது உள்ள போல்டர் அல்லது புதிய போல்டரில் பதியப்படுகிறது. இதற்கு டேக் அமைக்கலாம். கீ வேர்டாக ஒரு சொல்லைத் தரலாம். இந்த சொல் நாம் தளங்களைத் தேடுகையில் நமக்கு உதவும். இதில் தரப்பட்டிருக்கும் லைப்ரேரி வசதியின் மூலம் தேடுதலை உருவாக்கவும் சேவ் செய்திடவும் செய்யலாம்.

அடுத்ததாக ஸூம் வசதி. மற்ற பிரவுசர்களைப் போல் அல்லாமல் வியூ மெனு பாரில் ஸூம் வசதி அமைக்கப்பட்டுள்ளது. எப்11 கீயிலும் இந்த வசதி கிடைக்கிறது. முழுப் பக்க ஸூம் வசதி அல்லது சிறிய பக்கம் என இரண்டு வகைகள் கிடைக்கின்றன. சிறிது சிறிதாகப் பெரியதாக்கும் வசதியெல்லாம் இல்லை. இது அநேகமாக அடுத்த பதிப்பில் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.
பயர்பாக்ஸ் தொகுப்பு 3 ஐ இன்ஸ்டால் செய்தால் தொகுப்பு 2ல் உள்ள புக்மார்க், ஹிஸ்டரி, ஹோம் பேஜ் செட் அப் எல்லாம் போய்விடுமே என்ற கவலை எல்லாம் வேண்டாம். தொகுப்பு 3 முந்தைய தொகுப்பிலிருந்து அனைத்தையும் எடுத்துக் கொள்கிறது. தொகுப்பு 2ன் மூலம் ஏதேனும் இணைய தளத்தை டவுண்லோட் செய்து பாதியில் விட்டு விட்ட நிலையில் அதன் தொடர்ச்சியை பதிப்பு 3 தொடர்ந்து தானாக மேற்கொள்கிறது. இவை அனைத்தும் உங்களின் பழைய நண்பர்களாக உங்களை தொகுப்பு 3ல் வரவேற்கும். அத்துடன் பயர்பாக்ஸ் தொகுப்பு 2ஐக் காட்டிலும் இத்தொகுப்பு நான்கு மடங்கு வேகமாக இயங்குகிறது.
தொகுப்பு 3 உலகின் 46 மொழிகளில் கிடைக்கிறது. ஆப்ரிக்கான் மொழியிலிருந்து உக்ரேனியன் மொழி வரை இது மொழி பெயர்க்கப்பட்டு அந்த அந்த மொழிகளில் செயல்படுகிறது. தமிழ், இந்தி உட்பட எந்த இந்திய மொழியிலும் இது இல்லை. விரும்புபவர்கள் மொஸில்லா நிறுவனத்திற்கு எழுதலாம். இந்த தொகுப்பின் குறை என்று ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்றால் ஒன்றைக் கூறலாம். புதிய ஜெக்கோ இஞ்சின் இதில் பயன்படுத்தப்படுவதால் இதனை விண்டோஸ் 95,98, எம்.இ., மேக் ஓ.எஸ். எக்ஸ் பதிப்பு 10, 12 மற்றும் முந்தைய பதிப்புகளில் இயக்க முடியாது.

முன்தளம் பின்தளம் செல்லும் அம்புக் குறி சாவித் துவாரம் போல் தோற்றமளிக்கிறது. பிரவுசரின் பிரேம் நாம் இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ற வகையில் (விண்டோஸ், லினக்ஸ், மேக்) வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆட்–ஆன் வசதி:

கூடுதல் உபரி வசதிகளைத் தரும் புரோகிராம்களே ஆட்–ஆன் என அழைக்கப்படுகின்றன. இவை பல இணையதளங்களில் கிடைக்கின்றன. ஆனால் பயர்பாக்ஸ் பதிப்பு 3ல் இவை இணைந்தே தரப்படுகின்றன. ஒரு கீ கிளிக்கில் இவற்றை வேறு இணையதளங்களுக்குச் செல்லாமலே பெறலாம். அத்துடன் மொஸில்லா இணைய தளம் சென்றால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்–ஆன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவை அல்லாது இணைய தளங்களை உருவாக்குபவர்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் உதவிடும் வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய டவுண் லோட் மேனேஜர் ஒரு புரோகிராமினை எத்தனை முறை வேன்டுமானாலும் நிறுத்தி டவுண்லோ ட் செய்திட வழி தருகிறது. கீழே காட்டப்படும் நீள் கட்டம் எத்தனை முறை நீங்கள் ஒரு புரோகிராமினை நிறுத்தி நிறுத்தி டவுண்லோட் செய்துள்ளீர்கள் என்று காட்டுகிறது. டவுண்லோட் செய்திடத் தொடங்கி பாதியிலே நிறுத்தியதை கம்ப்யூட்டரை நிறுத்தி விட்டுப் பின் தொடங்கும்போதும் தொடரலாம். புரோகிராம்கள் டவுண்லோட் செய்து முடித்த பின்னர் முழுவதுமாக வைரஸ் எதுவும் தொற்றிக் கொண்டிருக்கிறதா எனச் சோதிக்கப்படுகிறது.

இதில் தரப்பட்டுள்ள பாஸ்வேர்ட் மேனேஜர் புதிய முறையில் செயல்படுகிறது. மற்ற பிரவுசர்கள் போல் ஒரு தளத்தினுள் நுழைகையில் டயலாக் பாக்ஸைக் கொடுத்து உங்கள் செயல்பாட்டின் குறுக்கே வருவது போல் இல்லாமல், நீங்கள் பாஸ்வேர்டினை அமைக்கும்போது “Remember,” “Never for this site,” மற்றும் “Not now” என உங்களுக்குப் பல தகவல்களைத் தருகிறது.

புக் மார்க்குகளை நிர்வகிப்பதிலும் பயர்பாக்ஸ் புதுமையைக் கையாள்கிறது. இவற்றைத் தேடுகையில் Most Visited, Smart Bookmarks, மற்றும் Places என மூன்று விதமான பிரிவுகளையும் அவற்றில் சிலவற்றிலும் உட்பிரிவுகளையும் கொடுத்து புக் மார்க் தேடலையும் இயக்கத்தினையும் எளிதாக்குகிறது. இன்னொரு புதிய வசதி வெப் மெயில் அக்கவுண்ட் வசதி. பி.ஓ.பி. வகை இல்லாத (யாஹூ போன்ற) இமெயில் தளங்களுக்கும் இதில் லிங்க் ஏற்படுத்தலாம். இதனை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மேற்கொண்டால் வேறுபாடு தெரியும். ஏற்கனவே பயர்பாக்ஸ் தொகுப்பு 2 வைத்திருப்பவர்கள் http://www.getfirefox. com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று தங்கள் தொகுப்பினை 3க்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இது 45 மொழிகளில் கிடைக்கிறது.

என்ன என்ன மொழிகள் என்று அறிய http://www.mozilla.com/ firefox/all.html என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இத்தொகுப்பின் புதிய அம்சங்கள் என்னவென்று விபரமாக அறிய http://www.mozilla.com/ firefox /features/ என்னும் முகவரிக்குச் செல்லவும். படித்தறிய பொறு மை இல்லாதவர்கள் என்னும் முகவரிக்குச் சென் றால் இத்தொகுப்பு குறித்த வீடியோ படக் காட்சியைக் காணலாம். அத்துடன் பயர்பாக்ஸ் தொகுப்பை பயன்படுத்தும் புதியவர், ஏற்கனவே சில காலம் பயன்படுத்துபவர் மற்றும் இதில் உள்ள நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தக் கூடியவர் என மூன்று பிரிவுகளாக உதவிக் குறிப்புகள் வழங்கிடும் தளம் http://www.mozilla.com/ firefox/tips/ என்ற முகவரியில் உள்ளது. இந்த தொகுப்பு வெளியிடுவதன் நோக்கம் குறித்த தகவல்கள் http://www. mozilla.com/firefox/3.0/releasenotes/ என்ற முகவரியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பில் இணைத் துப் பயன்படுத்தக் கூடிய ஆட்–ஆன் என்னும் கூடுதல் வசதிகளுக்கான புரோகிராம்கள் 5 ஆயிரத்திற்கும் மேலாக உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பயர் பாக்ஸ் தொகுப்பு இயங்குவதனை, அதன் தோற்றத்தினை, ஐகான்கள் மற்றும் பட்டன்க ளை உங்கள் விருப்பப்படி அமைக்கலாம். இவற்றைப் பெற தனியே தளங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. தொகுப்பிலேயே Tools>Addons என்ற பிரிவுகளுக்குச் சென்று பெறலாம். எப்படியெல்லாம் மாற்றலாம் என்பதற்கான் உதவிக் குறிப்புகள் www.mozilla.com/ enUS/ firefox/customize/ என்ற தளத்தில் உள்ளன.

ஏற்கனவே உள்ள இத்தகைய கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள் இந்த புதிய பதிப்பிற்குச் சரிப்பட்டு வருமா என்ற சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். பயர்பாக்ஸ் 3 அவற்றைச் சோதித்துப் பார்த்துவிட்டுத்தான் ஏற்றுக் கொள்ளும்.
புதிய பதிப்பில் பாதுகாப்பு வசதிகள் மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளன. நம்மை அறியாமல் வந்தமரும் புரோகிராம்களைத் தடுப்பதற்கும் வைரஸ்க ளை அண்டவிடாமல் தடுத்து நமக்கு எச்சரிக்கை தருவதற்குமாய் பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த தொகுப்பு ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறந்த நிலை புரோகிராம் என்பதால் பயர்பாக்ஸ் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வைரஸ் மற்றும் திருட்டு செயல்பாடுகளுக்கான புரோகிராம்களுக்கு எதிராகப் பல ஆட் ஆன் புரோகிராம்களைத் தந்து வருகின்றனர். லேரி என்ற பெயரில் ஒரு கற்பனைப் பாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இவர் ஒரு பாஸ்போர்ட் ஆபீசராகப் பணியாற்றுகிறார். நீங்கள் தேடிப் புக இருக்கும் தளங்கள் நீங்கள் அமைத்துள்ள முகவரிக்குள்ளதுதானா அல்லது அந்த பெயரில் இயங்கும் போலியான, தீங்கு விளைவிக்கும் தளமா என்று சோதித்து அனுமதிக்கிறார்.

இந்த கற்பனைப் பாத்திரம் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து அறிய http:// www.mozilla.com/ enUS/firefox/security/ identity/ என்னும் முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த தொகுப் பிற்கு ஆட்டோமேடிக் அப்டேட் வசதி உள்ளது. மொஸில்லா ஆறு அல்லது எட்டு வாரத்திற்கு ஒரு முறை இத்தொகுப்பினை அப்டேட் செய்வதற்கான பைல்களைத் தருகிறது. அத்துடன் இத்தொகுப்பின் பலவீனங்கள் தெரியும் போ தெல்லாம் அவற்றைச் சரி செய்து நிலைப்படுத்தும் புரோகிராம்கள் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிப்பு 2 பயன்படுத்தியவர்கள் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள். புதியதாக ஒரு பிரவுசரை இயக்கிப் பார்க்க விருப்பப் படுபவர்கள் இதனைப் பெற்று இயக்கலாம். இதன் வேகத்திலும் வசதியிலும் இழுக்கப் பட்டு வேறு தொகுப்புகளுக்குச் செல்ல மாட்டீர்கள் என்று பலர் இதற்கு வாக்களித்துள்ளனர். நீங்களும் சோதனை செய்து பாருங்களேன்.

No comments: