Wednesday, July 9, 2008

பைல் பிரிவியூ

அவசரமாக ஒரு பைலை தேடுகிறீர்கள். அது வேர்ட் டாகுமெண்ட் அல்லது பிரசன்டேஷன் பைலாக இருக்கலாம். ஆனால் என்ன பெயரில் பைலை சேவ் செய்தோம் என்று நினைவில் இல்லை. நாளும் நினைவில் இல்லை. என்ன செய்யலாம்? விண்டோஸ் எக்ஸ்புளோரரில் டைரக்டரியைத் திறந்து வைத்து சந்தேகப்படும் பைல்கள் ஒவ்வொன்றையும் திறந்து மூடி பின் அடுத்த பைலை திறந்து மூடி செயல்களை மேற்கொள்ள முடியுமா? எவ்வளவு சுற்றும் வேலை இது.

பைல் அருகில் கர்சரைக் கொண்டு சென்றாலே அதன் உள்ளே இருக்கும் விஷயங்களை சிறு போட்டோ போல காட்டும் வசதி இருந்தால் எவ்வளவு நல்லது. இருக்கிறது அந்த வசதி. பைல் பிரிவியூ என்று இதனை அழைக்கின்றனர். அதனை செட் செய்திடும் வழியைப் பார்ப்போம். முதலில் File மெனு சென்று அதில் Open விண்டோவினைத் திறக்கவும். இந்த விண்டோ கிடைத்தவுடன் நீங்கள் அதில் காட்டப்படும் பைல்களின் பட்டியலைத்தானே பார்க்கிறீர்கள். இப்போது அந்த விண்டோவின் வலது பக்க ஓரத்தில் பாருங்கள். அதில் Views என்று ஒரு பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்து திறந்தால் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Preview என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பெறவும். இப்போது விண்டோ இரு பகுதியாகப் பிரிந்து காட்டப்படுவதனைப் பார்க்கலாம். ஒரு பக்கம் பைல் பட்டியலுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் பெயர் தேர்ந்தெடுத்த நிலையில் இருக்கும்.

வலது பக்கம் உள்ள கட்டத்தில் அந்த பைலின் உள்ளே என்ன இருக்கிறது என்பது காட்டப்படும். இதன் முதல் பக்கம் தெரிந்தாலும் அருகே உள்ள அம்புக் குறியை அழுத்தி கீழே சென்று பைலில் உள்ளதைப் பார்க்கலாம். இதுதான் நீங்கள் தேடும் பைல் என்றால் உடனே அதனைக் கிளிக் செய்து திறந்து எடிட் செய்திடலாம். இல்லை என்றால் கர்சரை பைல் பட்டியலில் அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அந்த பைலின் பிரிவியூ கிடைக்கும். இந்த தேடல் எளிதாகத் தெரிகிறதா? நேரம் மிச்சமாகிறதா! அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

No comments: