நாம் விண்டோஸ் இயக்கத் தொகுப்பினைப் பயன்படுத்துகையில் ஒரு பைலைத் திறந்து இயக்க அது என்ன வகை பைல், அதனைத் திறக்க எந்த புரோகிராமினைத் திறக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப்படாமல் பைல் பெயர் மீது அல்லது அதன் ஐகான் மீது இருமுறை கிளிக் செய்கிறோம்.
விண்டோஸ் அதற்கான பைலை அறிந்து எந்த புரோகிராம் அதனைத் திறக்குமோ அதனை இயக்கி பைலையும் காட்டுகிறது. எடுத்துக் காட்டாக doc என்ற துணைப் பெயருடன் ஒரு பைல் இருந்தால் வேர்ட் புரோகிராம் இயக்கப்பட்டு அந்த பைல் காட்டப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் Open with window என்னும் விண்டோ காட்டப்பட்டு புரோகிராம்களின் பட்டியல் அடுக்கப்பட்டு எந்த புரோகிராம் வழி பைலைத் திறக்க என்று கேட்கப்படும். இது பெரும்பாலும் விண்டோஸ் இயக்கத்தால் உடனடியாக உணர்ந்து கொள்ள முடியாத பைல் கிடைக்கையில் இது போல விண்டோ கிடைக்கும்.
அதே போல இன்டர் நெட்டிலிருந்து இனம் புரியாத புதிய பைல் இறக்கப்பட்டு திறக்க முயற்சிக்கையிலும் இந்த விண்டோ கிடைக்கும். ஆனால் ஒரு முறை இது போல விண்டோவில் பைலுக்கான புரோகிராமினை தேர்வு செய்து அதன் மூலம் திறந்துவிட்டால் பின் அதே வகை பைல் கிடைக்கையில் விண்டோஸ் அந்த புரோகிராமினையே இயக்கும். மேலும் ‘Always use the selected Progroam with this kind of file’ என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்துவிட்டால் கம்ப்யூட்டர் அதனை நினைவில் வைத்து மறுபடியும் உங்களைக் கேட்காமல் இயக்கும். சில வேளைகளில் ஒரு வகை பைலுக்கு பல புரோகிராம்கள் இருக்கும். எடுத்துக் காட்டாக போட்டோ ஒன்று திறக்க பல புரோகிராம்கள் உள்ளன. மைக்ரோசாப்ட் பிக்சர் மேனேஜர், அடோப் போட்டோ ஷாப், பெயிண்ட் எனப் பல உள்ளன. இது போல பல வகை பைல்கள் உள்ளன. எனவே எந்த வகை பைலுக்கு எந்த புரோகிராம் சரியாக இருக்கும் என்று இங்கு பார்க்கலாம்.
1. டெக்ஸ்ட் டாகுமெண்ட்கள்: கீழே டெக்ஸ்ட் பைலுக்கான பல வகை பைல் வகைகள் தரப்படுகின்றன.
.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.
.ணூtஞூ: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.
.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.
.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.
. .ppt: விண்டோஸின் பிரிமியம் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.
. .pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட் பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
htm / html : ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.
.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.
சுருக்கப்பட்ட பைல்கள்: கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.
.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.
.cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.
பட பைல்கள்: விண்டோஸ் இயக்கத்தில் பலவகையான பட பைல்களை உருவாக்கலாம்; கையாளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். போட்டோக்கள், ஸ்கேன் செய்யப்பட்ட பைல்கள் ஆகியவை இந்த வகைகளே. கீழே நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப் பெயர்கள் தரப்படுகின்றன.
.psd: அடோப் போட்டோ ஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் மற்றும் உருவாக்கப்படும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும். உங்களிடம் அடோப் போட்டோ ஷாப் இல்லை என்றால் பைல் வகை மாற்றத்திற்கு வழி செய்திடும் புரோகிராம் ஒன்றின் (Hercule Software’s Graphic Converter) மூலம் இதன் பார்மட்டை மாற்றி வேறு துணைப் பெயருடன் அதே பைலை உருவாக்கிப் பின் அதற்கான புரோகிராமில் திறக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட மாற்றித்தரும் புரோகிராம் www.herculesoft.com என்னும் முகவரியில் கிடைக்கிறது.
.psp: இந்த துணைப் பெயர் கொண்ட பைல் போட்டோ ஷாப் போன்ற இன்னொரு இமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவான பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். இந்த புரோகிராம் சற்று விலை அதிகமானது. இந்த பைல்களையும் கன்வெர்டர் கொண்டு மாற்றலாம்.
.bmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும் அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம் மூலமும் இதனைத் திறக்கலாம்.
.jpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும். இதன் பயன்பாடு இன்டர்நெட்டில் அதிகம். ஏனென்றால் இந்த துணைப் பெயர் கொண்ட இமேஜ் பைலின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். இந்த பைலை உருவாக்க அதி நவீன பைல் கம்ப்ரஷன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பலவித இமேஜ் புரோகிராம் மூலம் இதனைத் திறந்து பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பு இந்த வகை பைல்களைப் பார்க்க மிக எளிமையான புரோகிராமாகும்.
.gif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு இமேஜ் வகை பைல் ஆகும். இதனையும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் கொண்டு திறந்து பார்ப்பது எளிது.
.tif: ஹோம் கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் இமேஜ்களைப் பதிந்து வைத்துப் பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட பைல் வகைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனைப் பல இமேஜ் எடிட்டிங் புரோகிராம்களில் திறந்து பயன்படுத்தலாம் என்றாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் எளிமையானதாகும்.
.scr: இது விண்டோ ஸ்கிரீன் சேவர் பைலின் துணைப் பெயர். ஒரு ஸ்கிரீன் சேவர் பைல் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட கண்ட்ரோல் பேனல் சென்று டிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோ பெற்று அதில் ஸ்க்ரீன் சேவர் டேப்பினைத் தட்டவும். இங்கு இன்டர்நெட்டில் இருந்து டவுண்லோட் செய்த ஸ்கிரீன் சேவர் பைல் புரோகிராமினை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.
ஆடியோ பைல்கள்: இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக் காட்டாக எம்பி3 பைல்கள் இந்த வகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
.mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள் கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியா பிளேயரும் இதனை இயக்கும்.
.wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை பைலாகும். டிஜிட்டல் ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.
aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.
.ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும் துல்லிதமாகவும் தரும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக் கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec) என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும். இதனை www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.
.wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல் வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனை இயக்கி ரசிக்கலாம்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள்: சில பைல்களை அதன் மீது டபுள் கிளிக் செய்தால் அவை எந்தவிதமான புரோகிராம் துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கலாகும். பெரும்பாலான இந்த பைல்கள் கீழ்க்காணும் துணைப் பெயர்களுடன் இருக்கும்.
.exe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம் இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்து இயங்கும்.
.bat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள் தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம் மற்றும் எடிட் செய்திடலாம்.
.vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம் புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களை வடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களை எழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ் புரோகிராம்களை உருவாக்குகின்றனர். எனவே இந்த துணைப் பெயருடன் உங்கள் இமெயிலில் ஏதேனும் அட்டாச்டு பைல் வந்தால் கவனமாக அதனை ஏதேனும் ஆண்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்துப் பின் திறக்கவும்.
No comments:
Post a Comment