Friday, August 22, 2008

பிளாஷ் டிரைவிற்கு ஆண்டி வைரஸ் பாதுகாப்பு

கையில் எடுத்துச் செல்லும் சிறிய கம்ப்யூட்டர் போல தற்போதைய பிளாஷ் டிரைவ் உருவாகி வருகிறது. சென்ற இதழ்களில் பிளாஷ் டிரைவில் வைத்து எந்த கம்ப்யூட்டரிலும் இயக்கக் கூடிய சில தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்பட்டன. அப்படியானால் இந்த பிளாஷ் டிரைவ்களிலும் ஆண்டி வைரஸ் தொகுப்புகளைப் பதிந்து வைத்து அதில் வைரஸ்கள் நுழைந்துவிடாமல் பாதுகாக்கலாமே என்று பல வாசகர்கள் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். இந்த எண்ணத்துடன் இணையத்தை தேடியபோது சில பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.

பிளாஷ் டிரைவ்களை நாம் பல்வேறு கம்ப்யூட்டர்களில் இணைத்துப் பயன் படுத்துகிறோம். பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று தெரியாது. அவற்றை அவ்வப்போது செக் செய்திடவும் முடியாது. அவை தரும் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதத்தையும் பெற முடியாது. அப்படியே அந்த கம்ப்யூட்டரில் ஆண்டி வைரஸ் புரோகிராம் இருந்தாலும் அது அப்டேட் செய்யப்பட்டதா எனவும் நாம் உறுதி செய்து கொள்ள முடியாது. எனவே பாதுகாப்பற்ற ஒரு கம்ப்யூட்டரில், பிளாஷ் டிரைவை இணைத்துப் பயன்படுத்துகையில் நம் பிளாஷ் டிரைவ் வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் உள்ள தகவல்களை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்நிலையில் தான் நம் பிளாஷ் டிரைவினையும், வைரஸ் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதுள்ளது. அதற்கான ஒரு புரோகிராம் குறித்து இங்கு காணலாம். AntiVir personal Edition என்னும் புரோகிராம் இவ்வகையில் சிறந்த புரோகிராமாக நமக்குக் கிடைக்கிறது. இதனை http://www. freeav.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராமினை பிளாஷ் டிரைவில் பதிந்து அதிலிருந்தே இயக்கலாம். இதனால் வைரஸால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரிலிருந்து வைரஸ்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. இந்த புரோகிராமினையும் தேவைப்படும்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதை நம் பிளாஷ் டிரைவில் பதிந்து கொள்வதும் எளிதாக உள்ளது.


AdAware SE Personal Edition 1.06 : இந்த புரோகிராம் நம் பிளாஷ் டிரைவிற்குள் எந்த ஸ்பை வேர் புரோகிராமும் நுழையவிடாமல் பாதுகாக்கிறது. இவ்வகையில் இதன் திறன் மிகவும் சிறப்பாக இருக்கிறது.


இந்த புரோகிரமினை இன்ஸ்டால் செய்திடுகையில் நேரடியாக உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் முதலில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதன் பின் Start, Programs, எனச் சென்று அங்கு கிடைக்கும் AdAware பைலினை உங்கள் பிளாஷ் டிரைவில் காப்பி செய்து விடுங்கள். பிளாஷ் டிரைவ் பாதுகாப்பில் இருக்கும் படி செட் செய்துவிடுங்கள். ஒரு சிலர் இவ்வளவு வேலை இருக்கிறதா? பேசாமல் பிளாஷ் டிரைவினை நம்பிக்கையற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இணைக்க வேண்டாம் என்று எண்ணுவார்கள். இந்தக் காலத்தில் நம்பிக்கை உள்ள மற்றும் நம்பிக்கை இல்லாத கம்ப்யூட்டர் என்று எதுவுமே இல்லை. எதில் வேண்டு மானாலும் மோசமான வைரஸ் இருக்கலாம். ஒரு முறை தலைமைச் செயலகத்தில் ஆணையர் ஒருவரின் பெர்சனல் கம்ப்யூட்டரில் இருந்து வீட்டில் பைல் பார்ப்பதற்காக பைல் ஒன்றினைக் காப்பி செய்திட வேண்டி இருந்தது. தலையில் சத்தியம் செய்யாத குறையாக வைரஸ் எதுவுமில்லை என்று சொன்னதால் பைலைக் காப்பி செய்து என் வீட்டிற்குக் கொண்டுவந்தேன். அதிக அதிகாரமிக்க அதிகாரியின் கம்ப்யூட்டரில் வைரஸ் எங்கிருக்கப் போகிறது என்று அசட்டுத் தைரியம். உயர் அதிகாரி சொல்லும் போது கேட்கத்தானே வேண்டும் என்கிற மரியாதை. பைலைக் காப்பி செய்து என் கம்ப்யூட்டருக்குமாற்றினேன். அடுத்த முறை பூட் செய்திடுகையில் பைல்கள் எல்லாம் தடுமாறின; தலைகீழாக மாறின; ஒவ்வொரு பைலும் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக மாறின. அவ்வளவு தான் அன்று இரவு சிவராத்திரி. என்ன செய்தும் வைரஸ் நகர மறுத்தது. இறுதியில் வேறு வழியின்றி ஹார்ட் டிஸ்க்கில் சி டிரைவினை ரீ பார்மட் செய்து பைல்களை மீண்டும் காப்பி செய்து உறங்க அதிகாலை மூன்று மணி ஆயிற்று. இத்தனைக்கும் என் கம்ப்யூட்டரில் நல்ல திறன் கொண்ட ஆண்டி வைரஸ் உள்ளது. எனவே பாதுகாப்பு வளையங்களை மட்டும் அதிகப்படுத்தினால் போதாது. எச்சரிக்கையுடனும் கம்ப்யூட்டர்களைக் கையாள வேண்டும்.

No comments: